இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
சின்னதாய் ஒரு சந்தோஷம் - எழுதியவர் tamiluthayam
மழை பெரிசாய் பெய்ய ஆரம்பித்தது. பஸ்ஸ்டாப்பில் நின்ற கூட்டமெல்லாம்
நிழற் குடைக்கு கீழ் ஓடியது. நான் பாதி நனைந்தும், பாதி நனையாமலும்
நின்றேன். பக்கத்தில் நின்று இருந்த ஒரு பெண்ணும் கைக்குழந்தையுடன் பாதி
நனைந்தும், பாதி நனையாமலும் நிற்கவே, அவளுக்கு நன்றாக நிற்க இடம்
கொடுத்து விட்டு நான் மழையில் நனைய துவங்கினேன். பாவம் கைக்குழந்தையுடன் கஷ்டப்படுகிறாள்.
குடை எடுத்து கொண்டு வந்து இருக்கலாம். நாலு நாளாய் பெய்த மழை, நேற்று சற்றே விட்டு இருந்தது. அதனால் குடை கொண்டு வரவில்லை.
குடை சில நேரம் சுமையாக இருப்பதால், சில நேரம் எங்காவது மறந்து போய்
வைத்து விட்டு வருவதால், மழையில் நனைந்தாலும் பரவாயில்லை என்கிற எண்ணம் வருகிறது. உண்மை தான். இப்பொதெல்லாம் ஞாபக மறதி அதிகமாக உள்ளது. வயது ஒரு காரணம்மா. முப்பத்தி எட்டெல்லாம் மூப்பா.
வாழ்க்கையில் அந்தந்த வயதில் நடக்க வேண்டியவை எல்லாம் சரியாக நடந்து இருந்தால், மனத் தெளிவு இருந்து இருக்குமோ. மழை இன்னும் பெரிசாய் பெய்ய ஆரம்பித்தது. இந்த மழையை போல் தான் வாழ்வில் இன்பங்களும்... ஒன்று பெய்து கெடுக்கும் அல்லது பெய்யாமல் கெடுக்கும். பஸ் வந்தால் பரவாயில்லை என்று பார்த்தால், பஸ்ஸும் அடம் பண்ணுகிறது. தான் நினைக்கும் எது தான்,
எப்போது தான் நடந்துள்ளது. தூரத்தில் ஒரு பஸ் வருவது தெரிந்தது. அதிகப்படியான மக்களை சுமந்தப்படி ஒரு பக்கமாய் சாய்ந்து கொண்டு வந்தது. ஏற முடியுமா. பஸ் ஐம்பதடி தள்ளியே நின்றது. ஆனாலும் ஒடிப் போய் ஏறினேன். ஏறுபவர்களுக்கும், இறங்குபவர்களுக்கும் இடையே சண்டை. தட்டு தடுமாறி படிக்கட்டில் கால் வைத்தபோது, பஸ் கிளம்பியது. எனக்கு முன்னே, மேல் படிக்கட்டில் பஸ் ஸ்டாப்பில் கை குழந்தையுடன் நின்ற பெண் நின்று இருந்தாள்.
எப்படி ஏறினாள் என்று தெரியவில்லை. கூட்ட நெரிசலில் குழந்தை அழ ஆரம்பித்தது. மழையால் வந்த குளிர், கூட்ட நெரிசலில் சற்றே தணிந்து இருந்தது. குழந்தை இப்போது பெருஞ்சத்தத்துடன் அலற ஆரம்பித்தது. அந்த பெண்ணால் மேலேயும் போக முடியவில்லை. கீழேயும் இறங்க முடியாது. "கைப்புள்ளையோட இருக்கிற அம்மாவுக்கு மேல போக வழி விடுங்க" என்று யாரோ ஒரு புண்ணியவான் சொல்ல,
அவளுக்கு சற்றே வழி கிடைத்தது. மேலே ஏறிய போது, நானும் உள் நுழைந்து மேலே ஏறி விட்டேன். இப்பொதெல்லாம் படிக்கட்டில் பயணம் செய்வதற்கு பயமாக உள்ளது. வயசாகிறதல்லவா... முப்பத்தி எட்டெல்லாம் ஒரு வயசா... ஒரு வழியாக ஒரு கம்பியை பிடித்து கொண்டு நின்று, பக்கத்தில் நிற்பது யார் என்று பார்த்தால், கைக்குழந்தை பெண் நின்றாள்.
இப்போது அவள் முகத்தை என்னால் நன்றாக பார்க்க முடிந்தது. மாநிறத்துக்கு சற்றே அதிகமான வெளுப்பு. நல்ல திருத்தமான முகம். ஆனால் முகத்தில் வறுமை அப்பட்டமாக தெரிந்தது. கைக்குழந்தை இப்போது சிரித்தது. கொள்ளை அழகாக இருந்தது. எந்த குழந்தையின் சிரிப்பாவது அழகில்லாமல் இருக்குமா. குழந்தை சற்று நோஞ்சானாக இருந்தது. நேரமாக, நேரமாக பஸ்ஸில் கூட்டம் அலை மோதியது.
மழை வெளியே விட்டபாடில்லை. பஸ்ஸின் உள்ளேயும் மழை ஒழுக ஆரம்பித்தது. இப்போது அவள் மிக நெருக்கத்தில் இருந்தாள். சரியாக சொல்வதானால் இடித்து கொண்டு தான் நின்றோம். தள்ளி நிற்க இடமில்லை. அவளை பார்க்கவும் பாவமாக இருந்தது. அவ்வப்போது அவளை நானும், என்னை அவளும் பார்த்து கொண்டோம். எதனால் என்று தெரியவில்லை.
குழந்தை திரும்ப அழ ஆரம்பித்தது. குழந்தை அவள் பிடியில் இருந்து நழுவ
பார்த்தது. அவள் குழந்தையை தூக்க ரெம்ப சிரமப்பட்டாள்.
கண்டக்டர் தூரத்தில் தெரிய, "எனக்கு ஒரு அஞ்சு ரூபாய் டிக்கெட் எடுத்துடுங்க" என்று ஐந்து ரூபாய் நாணயம் தர, எட்டிப்பிடித்து இருவருக்குமாய் டிக்கெட் எடுத்தேன். அழுகையை நிறுத்தி இருந்த குழந்தை திரும்ப கத்த ஆரம்பித்தது. குழந்தை முச்சா போனது, என் சட்டையை நணைந்தது. சிரித்தாள். குழந்தை எம்பியது.
அப்போது அந்த பக்கமாய் திரும்பி இருந்த ஒரு பெரியவர், இந்த பக்கமாய் திரும்பி- "ஏப்பா... நானும் அப்ப இருந்து பார்க்கிறேன். சின்னப்பிள்ளைய வைச்சுகிட்டு, அந்த புள்ள திண்டாடுது. பிள்ளைய வாங்கி கொஞ்ச நேரம் வைச்சுக்க வேண்டியது தானே. பெத்த பிள்ளைய தூக்குறதுக்கு உங்களுக்கெல்லாம் சங்கடம்மா இருக்கு. ம்... என்னத்தை சொல்றது" என்று
அவராகவே பேசிக் கொண்டு போனார்...
யோவ்.. என்னய்யா சொல்றே. அது யாரோ ஒரு பொண்ணு. நீ பாட்டுக்க லூசு தனம்மா சொல்லாதே. அந்த பொண்ணு சங்கடப்போகுது " என்று எனக்குள் நான் சொல்லி கொண்டவாறே அந்த பெண்ணை பார்த்தேன். சிரித்தாள். சிரித்த முகம் போலும்... அவளுக்கு. நல்ல வசதியான வீட்டில் வாழ்க்கை பட்டு இருந்தால், இன்னும் எழிலாக இருக்கக்கூடும். தலையெழுத்தை
மாற்ற முடியுமா. அவள் தலையெழுத்து குறித்து யோசிக்கிறேன். என்
தலையெழுத்து என்ன லட்சணத்தில் உள்ளது. முப்பத்தியெட்டு வயசில்...
இப்போது பெரியவர் என்னை பார்த்து முறைக்க ஆரம்பித்தார்."என்னமோப்பா " என்று பெரியவர் இழுக்க அல்லது அறுக்க ஆரம்பித்தார். பக்கத்து கிராமத்தை
சேர்ந்தவர் போலும். "தம்பி உன் வயசுல எனக்கு ஆறு பிள்ளைங்க. அந்த
காலத்துல திருவிழாக்கு போகும் போது, தலையில ஒரு பிள்ளய, தோள்ல ஒரு பிள்ளய, கையில ஒரு பிள்ளய தூக்கிட்டு அசராம்ம நடப்பேன். அந்த காலத்து சாப்பாடு அப்படி. உன்னால ஒரு பிள்ளைய தூக்க முடியல பாரு "
யோவ்... யோவ்... யோவ்... நிறுத்துய்யா. அந்த பெண் பெரியவர் சொன்னதெற்கெல்லாம் சிரித்து கொண்டே வந்தது. வெகுளியான பெண் போலும். பெரியவர் பாடம் நடத்தி விடுவார் போல் தெரிகிறது. இப்போது குழந்தை தூங்கி விட்டு இருந்தது. "இப்படி பிள்ளைங்க பாசம் இல்லாததால் தான்- கவர்மெண்டே ஒத்த பிள்ளைகளுக்கு மேல பெத்துக்காதீங்கன்னு சொல்லுது போல" என்ற பெரியவர்-
ஒரு சிறு இடைவெளி விட்டு "உனக்கு ஒரு பிள்ளை போதும்" என்று அதிர வைத்தார். பேச்சின், அளவின் விவகாரம் கூடிய போது தான்,அந்த பெண் வாயை திறந்து."அய்யா.. அவர் என் வீட்டுக்காரரு இல்ல. பஸ்ல போறவரு" என்றாள். "பஸ்ல போறவரா" என்ற பெரியவர்- சற்றே திடுக்கிட்டு போய், பிறகு சுதாரித்து கொண்டவராய்,
"முதலிலேயே சொல்லி இருக்க வேண்டியது தானேம்மா" என்று படக்கென்று சொல்லி விட்டு திரும்பி கொண்டார். நான் அவளையும், அவள் என்னையும் பார்த்து கொண்டோம். ஆம். ஏன் இருவருமே முதலிலேயே சொல்ல வில்லை. அவள் எதற்கு சொல்லவில்லை என்று எனக்கு தெரியாது.
ஆனால் நான்- முப்பத்தியெட்டு வயசாகியும் இன்னும் கல்யாணம் நடக்காததால், இனி நடக்கவும் வாய்ப்பு குறைந்து வருவதால், முதிர் கண்ணனாக(முதிர் கன்னிக்கு ஆண்பால்) இருப்பதால்- கொஞ்ச நேரம் கிடைத்த மனைவி, குழந்தை சந்தோஷத்தை இழக்க விரும்பாமல் கெட்டியாக பிடித்து கொண்டேனோ.
"செம்மொழிப் பைந்தமிழ் மன்றத்" தின் சிறுகதைப் போட்டிக்கான சிறுகதை.
"சின்னதாய் ஒரு சந்தோஷம்" எழுதியவர்: tamiluthayam
வலைப்பூவின் முகவரி: www.tamiluthayam.blogspot.com
1 அன்பு உள்ளங்கள்....:
REally wonderful.. :)
Miga miga arumai..
Vaalthugal..
Post a Comment