பையில் வைத்திருந்த அலைபேசி அழைத்தது. எடுத்துப் பார்த்தான். அழைப்பு வந்த எண்ணைப் பார்த்ததும் ஒரு மரியாதையோடு பச்சைப் பொத்தானை ஒத்தி காதில் வைத்து - "அய்யா! சொல்லுங்கய்யா"..
"சரிங்கய்யா"
...
"நீங்க கவலைப் படாதிங்க அய்யா. நான் பாத்துக்கிறேன்"
...
"அதுக்குத்தானய்யா போறேன். விசயம் முடிஞ்சதும் உங்களுக்குக் கூப்புடுரேன்யா"
...
அலை பேசியை அணைத்து பையில் வைத்துக் கொண்டு பேருந்துக்காகக் காத்திருக்க ஆரம்பித்தான்.
நீல வண்ணத்தில் கட்டம் போட்ட சட்டையும் துவைத்துத் துவைத்துப் பழுப்பேறிய வேட்டியும் கட்டி இருந்தான். கழுத்தில் வியர்வையை மட்டுப் படுத்த கைக்குட்டை ஒன்றை சுருட்டி வைத்திருந்தான். வேட்டியை மடித்தும் கட்டாமல் கீழிறக்கியும் விடாமல் லேசாக வழித்து கால்களுக்கிடையில் கொடுத்து நின்றிருந்தான்.
பேருந்து வந்தது. அவன் போகும் பேருந்தா என்பதை சரி பார்த்துக் கொண்டு ஏறினான். அவனுடன் இரண்டு பள்ளிச் சிறுவர்களும் போட்டி போட்டுக் கொண்டு ஏறினர்.
உள்ளே ஏறி காலியாய் இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தான். நடத்துனரிடம் சீட்டு வாங்கிக் கொண்டு பேருந்தை பார்வையால் அலசினான்.
பேருந்தில் ஒரு சிலரே இருந்தனர். இவனுடன் ஏறிய இரு சிறுவர்களும் இன்றைய தேர்வில் தாங்கள் எழுதிய/எழுதாமல் விட்ட பதில்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். முன்னால் ஓட்டுனருக்கு இடதுபுறம் இருந்த இருக்கையில் அமர்ந்து அவரிடம் கதைத்துக் கொண்டு வந்தார் நடத்துனர். அவருக்குப் பின்னாலிருந்த இருக்கையில் இரண்டு பெண்கள் கையில் பெரிய கூடையுடன் அமர்ந்து அடுத்த வீட்டு ஆண்டாளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர்.
இவனுக்கு மூன்று இருக்கைகள் பின்னால் ஒரு இளைஞனும் யுவதியும் அமர்ந்திருந்தனர். அவர்களின் நெருக்கமும், சிரிப்பும், அந்தப் பெண்ணின் கன்னத்தில் பூசியிருந்த சிவப்பு வெட்கமும், அவர்கள் காதலர்கள் என்று சொல்லாமல் சொல்லின. அவன் குறும்பாய் எதாவது சொல்லி இருக்க வேண்டும். அவள் சிணுங்கிக் கொண்டு செல்லமாய் அவனுக்கு வலிக்காமல் அவன் கையில் அடித்தாள். அவன் அது வலித்தது போல அழுதான். அவள் அவனைச் சமாதானப் படுத்துவதற்காக, பேருந்தில் யாரும் பார்க்காத தைரியத்தில், அவன் கைகளில் முத்தம் கொடுத்தாள். அவன் கிறங்கிக் கண்களை சொறுகினான்.
அவர்களைப் பாத்ததும் இவனுக்கு செல்வியின் ஞாபகம் வந்தது. இவனும் செல்வியும் அந்தக் காதலர்களைப் போலத்தான். இவன் அய்யா வீட்டுக்கு தினமும் செல்லும் பேருந்து வழித்தடத்தில் அவளும் வருவாள். அங்கே உள்ள ஒரு பள்ளிக்கூடத்தின் வாசலில் முறுக்கு, சீடை, பொரி உருண்டை போன்றவற்றை வியாபாரம் செய்து வந்தாள். இவனைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு சிறு புன்னகை. கண்களில் ஒரு ஒளிக்கீற்று. அது போதாதா ஒரு ஆண்மகனுக்கு?
சீண்டலாகப் பேச ஆரம்பித்து சினிமா போகும் வரை நீண்டது காதல். தன் வாழ்க்கையில் எல்லாமே செல்விதான் என்று நினைத்திருந்தான். தன் தொழிலில் அவ்வப்போது மொத்தமாகப் பணம் கிடைக்கும்போதெல்லாம் செல்விக்கு சேலை, தோடு என்று வாங்கிக் கொடுத்து அழகு பார்த்தான். வேலை நிமித்தம் மூன்று மாதங்களோ ஆறு மாதங்களோ பிரிந்திருக்க நேர்ந்தால் செல்வியின் நினைவிலேயே அந்தக் காலத்தைக் கழித்தான். செல்விக்கு இருந்த மூன்று மூத்த சகோதரிகளால் இவர்கள் திருமணத்திற்குக் காத்திருக்க வேண்டியதாயிற்று.
ஆறு வருடங்கள் ஓடிப் போன தடமே தெரிய வில்லை. அந்தச் சனியன் பிடித்த ஒருநாளில் இவன் என்ன தொழில் செய்கிறான் என்பதை செல்வி கண்கூடாகப் பார்க்க நேர்ந்தது. எந்தத் தொழிலுக்கு தன் தந்தையைப் பறி கொடுத்து விட்டு இவர்கள் குடும்பம் நடுத்தெருவில் நிற்கிறதோ அதே தொழிலை இவனும் செய்கிறான் என்று தெரிந்ததுமே இவனிடம் இருந்து விலகினாள். இவன் சமாதானம் செல்லவில்லை. "எம்பிள்ளைங்கள அனாதியா பாக்குற தயிரியம் எனக்கு இல்ல சாமி" என்று சொல்லி இவன் வாங்கிக் கொடுத்த அத்தனையையும் இவன் முகத்தில் எறிந்துவிட்டுப் போய்விட்டாள்.
அவளை அதன் பிறகு அந்த வழித்தடத்தில் அவன் பார்க்கவே இல்லை. இன்னும் அந்தத் தொழிலையே தொடர்வதால்,அவள் எங்கே என்று அவளைத் தேடவும் முயலவில்லை. கண்களின் ஓரத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டான்.
பேருந்து அந்த நிறுத்தத்தில் நின்றது. இவன் இறங்கி அங்கே இருந்த இளநீர்க் கடையின் முன் நின்றால். வாங்க யாருமில்லாமல் ஈ ஓட்டிக் கொண்டிருந்த கடைக்காரன் "வாங்கண்ணே வழுக்கையா வெட்டவா தண்ணியா வெட்டவா" என்று கேட்டு பதிலுக்கு அவன் முகத்தைப் பார்த்தான்.
"எளநி எம்புட்டு?"
"பன்னெண்டு ரூவாண்ணே"
பேருந்து கிளம்புவதற்காக நடத்துனர் கொடுத்த இரட்டை விசில் கேட்டது. கேட்டதும் சட்டையின் பின்னாலிருந்து எடுத்த அருவாளை ஓங்கி "ஏண்டா எங்க அய்யாவுக்கு எதிராவா சாச்சி சொல்லப்போற" என்று அவன் கழுத்தில் இறக்கினான். வெட்டை வாங்கியவன் வெட்டிய வாழை மரம் போல சரிந்தான். கிளம்பிக்கொண்டிருந்த பேருந்தை நோக்கி ஓடிக் கொண்டே கைக்குட்டையால் அருவாளில் இருந்த ரத்தத்தைத் துடைத்துவிட்டு, சட்டையின் பின்னால் சொறுகிக் கொண்டு பேருந்தின் படிக்கட்டில் தொற்றினான்.
"ஐயா சாமி எங்கய்யனப் போல ஒங்களயும் வெட்டிட்டாய்ங்களே பாவிங்க" என்ற சத்தமான அழுகுரல் கேட்டு படியில் இருந்தவாறே திரும்பினான். அழுதுகொண்டிருந்தவளைப் பார்த்ததும் கம்பியைப் பிடித்துக் கொண்டிருந்த அவன் கை நழுவியது.
http://pithatralkal.blogspot.--
Thanks & Regards,
முகிலன் (Dhinesh)
1 அன்பு உள்ளங்கள்....:
so sad story.. :(
Wishes to u..
Post a Comment