கூடு!
தண்ணீர் பாட்டிலை வாங்கிவிட்டு திரும்பும் போது எதிர்பாராத விதமாக அவள் மீது மோதினான். “ஸாரி...” என்றான். “இட்ஸ் ஓக்கே.. இட்ஸ் ஓக்கே"" என்று முறைத்தபடி அவள் கடந்து சென்றாள். அவள் அழகைக் கண்டு நினைவிழந்து நின்ற போது ஒரு வயதானவர் தன்னை பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது. “மை காட்... என்ன பார்வை இது. எப்படி முறைக்கிறான். ஒரு வேளை அவள் சொந்தகாரனாக இருப்பானோ” என்றவாறு மூன்றாம் ப்ளாட்பாரத்தை நோக்கி நகர்ந்தான் ரவிஸ்ரீநிவாஸ் என்கிற ரவி.
எங்கு பார்ப்பினும் கூட்டம்... ஹவுரா இரயில் நிலையத்தின் ஜன நெரிசலை எதிர்கொண்டவாரே கொரமண்டல் எக்ஸ்பிரஸில் தன் கம்பார்ட்மெண்ட் அருகில் வந்து நின்றான். எத்தனை விதமான மனிதர்கள்.... பாசம், காதல், பிரிவின் சோகம், சந்தோஷம் என பலவிதமான முகங்கள். இவர்களின் நடுவே தன் முகம் எவ்வகையான உணர்வை வெளிப்படுத்துகிறது என நினைத்து, தன் முகத்தைத் தொட்டு பார்த்துக் கொண்டான். பயணம் பற்றிய எண்ணம் வந்தது. எரிச்சலே மிஞ்சியது. முணுமுணுக்க தொடங்கினான். ”ச்சே இந்த அம்மாவுக்கு என்ன அவசரம். ரெண்டு வாரத்துல ஆடிட்டிங் வேற இருக்கு....” சட்டென யாரும் தன்னை கவனிக்கிறார்களா என திரும்பிய போது, மோதிய அப்பெண், இவனைப் பார்த்தவாறு அடுத்த கம்பார்ட்மெண்டில் ஏறினாள்.
கைப்பேசி ஒலித்தது. "amma calling.." ப்ச்.... எத்தனை முறை போன் செய்வாள் அம்மா. பதில் சொல்லி மாலல. “அம்மா ரயில்ல இப்ப தான் ஏறப்போறேன். நாளைக்கு சாயங்காலம் இறங்கிடுவேன்மா. பச்... ப்ளைட்ல டிக்கெட் கிடைக்கலம்மா.... நேக்கு தெரியும் தெரியும்... பூஜையை நாளைக்கு சாயங்காலம் தள்ளி வச்சுக்கோயேன்...சரி வந்திடுறேன். பை” இந்த காலத்தில் பூஜை, ராசி என்று ச்சே என்று நினைத்தவாறு கைப்பேசியை அணைத்தான்.
இருக்கைக்கு வந்து ”The Exorcist" புத்தகத்தில் மூழ்கினான். ஒரு கட்டத்துக்கு மேல் படிக்க முடியாமல் புத்தகத்தை மூடினான். என்ன ஒரு முட்டாள் தனம். ஒரு பக்கம் பேய் என்று பயமுறுத்துகிறார்கள் மற்றொரு பக்கம் கடவுள்,பூஜை என்று அம்மாவை யாரோ அங்கு ஏமாற்றுகிறார்கள். நாளை பூஜைக்கு நான் இருந்தே ஆகவேண்டுமாம். என்ன ஒரு ஏமாற்று வேலை.
ரயில் ஒரிசாவிற்குள் நுழைந்தது. புவனேஸ்வரை தாண்டிய போது தான் கவனித்தான். மொத்தம் இருபது பேர் கூட இருக்கவில்லை இந்த கம்பார்ட்மெண்டில். ஏறிய அனைவரும் இறங்கி விட்டார்களா? அடுத்த கம்பார்ட்மெண்ட் வரை போய் வரலாமா? அவள் இருந்தால் பேசலாமே. பார்க்க தமிழ் பெண் போல தான் இருக்கிறாள். ஒரு வேளை தெலுங்காக இருக்குமோ? தெலுங்காக இருந்தால் இடையே இறங்கிவிட்டால்? ரயிலுக்கு நிகரான எண்ண ஓட்டங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் எழுந்து அடுத்த கதவருகே நின்று சிகரெட்டை எடுத்தான்.
நிலவு இல்லாமல் தாரை இழுத்து போர்த்தியிருந்தது இரவு. ரயில் பெட்டிகளின் வெளி்ச்சங்கள் தண்டவாள கற்களை கூட தாண்டாமல் சுருங்கியிருக்கவே, இருக்கைக்கு வர திரும்பியவன் ஒரு கணம் அதிர்ந்து தான் போனான்.
வெளியே கிடைக்காத முழு நிலவு மதியம் மோதிய பெண்ணின் வடிவில் நிற்க ஒரு கணம் என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே நின்றான்.
"ஸாரி...”
“எதற்கு. மதியம் என் மீது மோதியதற்கா?”
“இல்ல... வந்து .... அட நீங்க தமிழா?”
சிரித்தாள். அந்த குளிரிலும் அவனுக்கு வியர்த்து போனது. ”என்ன ஒரு வசீகர சிரிப்பு. இவள்.. இந்த தேவதை என்னிடம் பேசுவது உண்மையா? தேங் காட்” என கடவுளுக்கு நன்றி சொன்னான். அட கடவுள்!
“நீங்களும் சென்னை தான் போறீங்களா?”
“இல்லை. நான் இடையே இறங்கி விடுவேன்”
”ஓ.. பை தி வே என் பேரு ரவி. உங்க பேரு என்ன?”
“பூஞ்செல்வி”
“வாவ். அருமையான பெயர். இந்தகாலத்துல கூட இந்தமாதிரி பெயர் வைக்கிறாங்களா என்ன? உங்க தமிழ் கூட ரொம்ப சுத்தமான தமிழா இருக்கே?”
அதற்கும் சிரித்தாள். இன்னும் கொஞ்சம் சிரிக்க வேண்டி காலைப்பிடித்து கெஞ்ச வேண்டும் போல் இருந்தது. சில்லென்ற காற்றும் அவளிடமிருந்த வந்த வாசமும் நாடி நரம்புகளில் ஒரு வித கிளர்ச்சியை ஏற்படுத்த என்ன சொல்வது என்ன செய்வது எனத்தெரியாமல் பார்த்துக்கொண்டிருந்தவனை ஒரு குரல் அவனை அவனுக்கு மீட்டுத்தந்தது.
”சார். நீங்க டாக்டரா?” கேண்டீனில் டீ விற்கும் பையன் ஹிந்தியில் வினவினான்.
“இல்லப்பா. ஏன் என்னாச்சு?”
“S4 கம்பார்ட்மெண்ட்ல ஒரு பாட்டி ஒருத்தங்க பேச்சு மூச்சு இல்லாம இருக்காங்க. கண்ணு மட்டும் திறந்திருக்கு. கண்ணுல இருந்து தண்ணி தண்ணியா வந்துகிட்டு இருக்கு. ஏறும் போது நல்லா தான் இருந்தாங்களாம். டீ டீ ஆர் யாராவது டாக்டர் இருக்காங்களான்னு பார்க்கச் சொன்னாங்க. அவர் அந்த பக்கம் தேடி போயிருக்காரு” என்றவாறு அவளைப் பார்த்தான். பிறகு ரவியையும் பார்த்தான்.
“இல்லப்பா அடுத்த கம்பார்ட்மெண்ட் போய் பாரு” என்று அவனை துரத்தினான். சரியான கரடி அதுவும் சிவபூஜையில். அட மறுபடியும் கடவுள்!. தனுக்குள்ளேயே சிரித்துக் கொண்டான்.
“ஏன் சிரிக்கிறீங்க?”
“நான் சிரிச்சேன்னா? இல்லையே?”
“இல்லை உங்க கண்ணும் உதடும் நீங்க சிரித்ததை சொல்லிற்று. பொய் சொல்ல வேண்டாம்” என சிரித்தாள்.
“நீங்க சைக்காலஜி படிக்கிறீங்களா என்ன? எப்படி கண்டுபிடிச்சீங்க?....” நிறுத்தினான் பிறகு “கொஞ்ச நேரம் வரைக்கும் கடவுள், பூஜை, ராசி, பேய்ன்னு எதுமேலயும் எனக்கு நம்பிக்கை இல்லாம இருந்தது. உங்கள பார்த்த பிறகு என்னையறியாம கடவுளை நினைக்க ஆரம்பித்துவிட்டேன். இனி பொய்யெல்லாம் மெய்யென தெரியும் போல”
“கடவுள் மேல நம்பிக்கை இல்லையா? ஹா ஹா ஹா” வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தாள். ஏதோ பெரிதாக சொல்ல வருகிறாள் என நினைத்தவனுக்கு அவள் ஒரு குழந்தை போல் கைகளைக் இருக்க கட்டிக் கொண்டு ”எனக்கு இங்கே மிகவும் குளிர்கிறது . வாங்களேன் என் இருக்கைக்கு போகலாம்.” அழைத்தாள்.
அழைத்தாளே தவிர இவன் பதிலுக்கு காத்திராமல் அடுத்த கம்பார்ட்மெண்டில் நுழைய இவன் காந்தத்திடம் ஈர்க்கப்பட்ட இரும்பு போல சென்றான்.
அடுத்த கம்பார்ட்மெண்டில் பத்து பேர் கூட இருக்கவில்லை. ஆட்கள் இல்லாத இருக்கைகளில் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தது. ஆட்கள் இருந்த இருக்கைகளிலும் உறக்கத்திற்காக விளக்குகள் அணைக்கப்பட்டு அங்கொன்று இங்கொன்றுமாக எரிந்து கொண்டிருந்தது. காற்றோடும், அவளின் வாசத்தோடும் இந்த கருமையும் சேர்ந்துகொள்ள அவன் மனது சில வாலிப சூத்திரங்களுக்குட்பட்ட கணக்குகளை போடத் தொடங்கியது.
“இங்கே உட்காருங்கள்” என்ற அவள் காட்டிய இருக்கையின் அருகே இருந்தவரைப் பார்த்து கொஞ்சம் அதிர்ந்து தான் போனான். இதுவரை போட்ட கணக்குகள் எல்லாம் தப்பு கணக்காக மாற ஆரம்பித்தது. அவளை மோதிய போது தன்னை வெறித்துப் பார்த்த அந்த வயதானவர். சுருட்டை புகைத்துக்கொண்டிருந்தார்.
அவர் இருமியதை கண்டபோது உடலாரோக்கியம் பற்றி தெரிந்தாலும், கண்களில் இருந்த ஒரு வித ஈர்ப்பு, முகமெல்லாம் சுருக்கம், கழுத்தில் இருந்த சிவலிங்கம், நெற்றியில் விபூதியினூடே வரைந்த சூலம், கைகளில் கட்டியிருந்த பல வண்ணக்கயிறுகள் என அவரது தோற்றம் அவனைச் சற்றே பிரமிக்க வைத்தது.
“உன்னால் இந்த சுருட்டை சிறுது நேரம் கூட பிடிக்காமல் இருக்க முடியாதே” என்றவாறு அவர் கையில் இருந்த சுருட்டை எடுத்து ஜன்னலின் வெளியே வீசினாள்.
“இது..... உங்க தாத்தாவா?”
சிரித்தாள். கொல்கிறாள் இவள். இவளை சிரிக்க வேண்டாமென சொல்ல வேண்டும். இவள் சிரித்தாள் மற்றதை மறந்து விடுகிறேன். அவரும் சிரித்தார்.
“நீங்க ஏன் சிரிக்கிறீங்க?”
“அவள் சிரிப்பை நிறுத்த முடியாது. அலைகடலைப் போன்றது அது!” இருமினார்
”மைகாட்! சரியான சைக்காலிஜிகல் குடும்பமா இருக்கும் போலயே? மனசுல நினைக்குறதை அப்படியே சொல்றீங்க. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல”
“மந்திரங்கள் சொல்”
“வாட்!?”
“மந்திரங்கள்.” அழுத்திச் சொன்னார். ரயில் சென்ற வேகத்தில் காற்றும் சிறிது நின்று அவர் சொல்வதை கேட்டது போன்ற கணீர் குரல்.
“எதுக்கு? மந்திரங்கள் எதுக்கு நான் சொல்லனும்? மந்திரம் சொன்னால் என்ன ஆகும்”
”ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஓம் வகார மகார நகார
நமஹா சிவாய நமஹ........... மந்திரங்கள் சொன்னால் நடக்காதது எதுவும் இல்லை. காற்றை நிறுத்தலாம். புயலையும் மழையையும் வரவழைக்கலாம், பூமியை பிளக்க வைக்கலாம், ஏன் கடல் அலைகளையும் நிறுத்தலாம்....இவள் சிரிப்பையும் கூட நிறுத்தலாம்."
"என்னை பார் இந்த உடல் என்னும் கூடுக்கு 90 வயது ஆனால் என் ஆத்மாவுக்கு வயதில்லை. எல்லாம் மந்திரங்களினால் மட்டுமே சாத்தியம்”
“எனக்கு ஒன்னும் புரியல. நீங்க யாரு? என்ன சொல்ல வரீங்க?”
“உன்னைப்போல் பிறந்த தேதியும் ராசியும் உள்ளவன், மேலும் எழுபது ஆண்டுகளுக்கும் அதிகமான வருடங்களுக்கு பிறகு இன்று வரும் கிரகணத்தில் மந்திரம் சொன்னால் நடக்காதது எதுவும் கிடையாது”
“நோ....நோ ஐம் கன்பியூஸ்டு. நான் போறேன். எனக்கு தூக்கம் வர்ர மாதிரி இருக்கு” நாக்கும் அவன் மனதை போல் தள்ளாட்டியது
“உட்காருங்கள் பிறகு போகலாம்.” இடைவெளி விட்டு ”இருவரும்” என்ற படி சிரித்தாள். கடவுளே இவளை சிரிக்க வேண்டாமென சொல். என் மதியை மயக்குகிறாளே. காலில் விழுந்து “சிரிப்பதை நிறுத்து பெண்ணே. என்னை நானாக இருக்க விடு” கெஞ்ச வேண்டும் போலிருந்தது.
சிரித்தார்கள் இருவரும். ஓ! இதுவும் அவர்களுக்கு தெரிந்துவிட்டதா. அந்த இரயில்பெட்டியில் எரிந்த ஒன்றிரண்டு விளக்குகளும் அணைந்திருந்தன. அந்த இருட்டில் இவர்களின் முகம் மட்டும் சர்பவிஷத்தை கலந்த பாலின் நிறத்தில் மிகத்தெளிவாக அவனுக்கு தெரிந்தது.
ரயிலின் ஓடும் சப்தம் மெதுவாக குறைந்து கொண்டே வந்தது. இப்போது அவர் குரல் மட்டும் அதிரும் வண்ணம் மிக பிரம்மாண்டமாய் ஒலிக்கத்தொடங்கியது.
வஸ்த்ரம் ஸூக்ஷ்மம் துகூலே ச தேவாநாமபி துர்லபம் |
க்ருஹாண த்வம் உமாகாந்த ப்ரஸந்நோ பவ ஸர்வதா ||
உமாமஹேச்வராய நம:, வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி
மகுடியாய் கிழவன் குரல் ஒலிக்க நாகமாய் அவன் ஆழ்மனதிலிருந்து திரும்ப திரும்ப அந்த மந்திரத்தைச் சொல்ல, உலகமே இருளத் தொடங்கியது. அந்த இருளில் யாரோ ருத்ர தாண்டவம் ஆட கண்கள் நிலைகுத்தி வாய் ஒட்டி, அந்த ஆட்டத்தின் ருத்ரத்தை கண்டவன் ஆடியவனின் காலில் கண்ணீருடன் விழுந்தான்.
மயக்கம் தெளிந்த போது அவள் மடியில் படுத்திருந்தான்.
“எழுந்து விட்டாயா?” என்றபடி வாயோடு வாய் வைத்து முத்தம் கொடுத்தாள். ”இப்போது எப்படி இருக்கிறது”
“பரவாயில்லை.....” என்றபடி எழுந்தான். “இறங்கும் இடம் வந்து விட்டதா?” இரயில் தன் நிலையம் இல்லாத ஒரு காட்டில் நின்றிருந்தது.
“ம். வா போகலாம்” என்ற படி அழைத்துச் சென்றாள்.
பாதி தூரம் சென்றவன் “அய்யோ சுருட்டை எடுக்க மறந்து விட்டேனே” என்றபடி கிழவனை நோக்கினான்.
கிழவனின் உடல் அசைவின்றி கிடந்தது. கண்கள் மட்டும் திறந்திருந்தது. கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
“உன்னால் இந்த சுருட்டை சிறிது நேரம் கூட பிடிக்காமல் இருக்க முடியாதே” என்ற படி அவனை இழுத்துச் சென்றாள்.
இதமுபாயநம் ஸதக்ஷிணாகம் ஸதாம்பூலம் ஸாம்பசிவ ப்ரீதிம்
காமயமாந: துப்யமஹம் ஸம்ப்ரததே ந மம||
முணுமுணுத்தபடி அவளுடன் கைக்கோர்த்தபடிச் சென்றான்.
------------------------------
நான் ”ஆதவன்”
050-2143731
சார்ஜா
0 அன்பு உள்ளங்கள்....:
Post a Comment