திவ்யா என் காதலியே
சென்னையில் இருந்து புறப்பட்ட அந்த ரயிலில் வழக்கம்போல பிரசன்னா அலுவலகம் முடிந்து வீடு திரும்பிகொண்டிருந்தான்.அன்றைய தினம் ரயில் பெட்டி மிகவும் வெறிச்சோடி போயிருந்தது.காலையில் இருந்தே அவனுடைய மனம் மிகவும் அமைதியற்று இருந்தது.மெதுவாக ரயில் பெட்டியின் உள்ளே நடக்க தொடங்கிய பிரசன்னா குளிரில் நடுங்கியபடி,மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் அமர்ந்திருந்த இளம்பெண் ,அச்சு அசலாய் அவன் காதலி திவ்யாவின் உருவத்தை ஒத்திருந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனான்.அவளின் நிலை உணர்ந்து தன்னுடைய குளிராடையை அவளின் மேல் போர்த்திவிட்டான்.எந்த சலனமும் இன்றி வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்த அந்த பெண்ணின் முக வாட்டம் அவள் மிகுந்த பசியோடு இருப்பதை நன்கு உணர்த்தியது.தனக்காக வாங்கி வந்திருந்த உணவு பொட்டலத்தை அவளின் முன் பிரித்து வைத்தான்.அளவிடமுடியாத பசியோடிருந்த அந்த பெண் உணவை கண்டதும் அதி விரைவாக அந்த உணவை உண்ண தொடங்கினாள்.
பிரசன்னாவின் நினைவுகள் பின்னோக்கி நகர தொடங்கின.பிரசன்னா மிக்க வசீகரமான அழகுடையவன்.கல்லூரியில் அவன் இயல்பின் பால் கவரப்பட்டு பலரும் அவன் மேல் மையல் கொண்டு காதலை வெளிப்படுத்திய போதும் பிரசன்னா யாருடைய மனதும் புண்படா வண்ணம் அவர்களின் காதலை மறுத்துக்கொண்டிருந்ததான்.அவன் இறுதியாண்டில் நுழைந்தபோது முதலாமாண்டு மாணவியாய் வந்த திவ்யாவை கண்டதும் மனஉறுதி எல்லாம் காணாமல் போக கண்டான்,அவனுக்கு திவ்யாவின் மேல் மேல் தீராத காதல் உண்டாயிற்று.பிரசன்னா வெளிப்படுத்திய காதலை திவ்யா மறுப்பின்றி ஏற்றுக்கொண்ட போது பிரசன்னாவின் மகிழ்ச்சி பன்மடங்காக பல்கி பெருகியது.
அடுத்த நான்கு ஆண்டுகளில் அவர்களின் காதல் கிழைத்து தழைத்து பெருமரமாக வேரூன்றியது.நன்கு படித்து முடித்து இருவரும் நல்ல வேலையில் சேர்ந்தும் விட்டிருந்தனர்.இருவருடைய குடும்பமும் அவர்களின் காதலை முழுமையாக அங்கீகரித்து திருமணத்திற்கு இசைவும் தெரிவித்திருந்தது.அத்தகையதொரு சூழலில் திடீரெனெ ஒரு சாலை விபத்தில் திவ்யா இறந்து போனபோது பிரசன்னாவிற்கு வாழ்வே சூன்யமாகிபோனது.அவன் முகம் புன்னகையற்று போனது. அவன் நாட்கள் நரகமாக நகர தொடங்கின.அவன் தாயின் வற்றாத கண்ணீர் தான் பிரசன்னாவின் மனதை இளக்கி அவனை இயல்பு வாழ்விற்கு திரும்ப வைத்திருந்தது.அத்தகையதொரு சூழலில் திவ்யாவை போன்றே வயதும் உருவமும் உள்ள ஒரு பெண்ணை மனநிலை சரியில்லாமல், மற்றவர்களால் துன்புறுத்தல்களுக்கு ஆளான நிலையில் கண்டதும் பிரசன்னாவிற்கு கண்களில் கண்ணீரே வந்துவிட்டது.சாப்பிட்டு முடித்த பிறகு அந்த பெண் மிகுந்த அசதியால் பிரசன்னாவின் மடியில் தலை வைத்து உறங்க தொடங்கிவிட்டாள்.பிரசன்னாவிற்கு தன்னுடைய திவ்யாவே தன்னிடம் திரும்பி வந்துவிட்டதை போன்றதொரு அழுத்தமான உணர்வு மேலோங்கியது.சற்று நேரத்தில் எல்லாம் பிரசன்னா இறங்க வேண்டிய நிறுத்தம் வந்து விட்டது.பிரசன்னா அவளுடைய கைகளை பற்றி அழைக்க அந்த பெண் மறுப்பேதுமின்றி ஒரு குழந்தையாய் அவனை பின் தொடரலானாள்.இனி அந்த பெண்ணிற்கு அழுத்தமான துணையாக பிரசன்னா இருப்பான்.அந்த சிறு ரயில் பயணம் ஒரு மனநிலை சரியில்லாத அபலை பெண்ணின் வாழ்வுக்கு வெளிச்சத்தை உண்டாக்கி இருந்தது.வாழ்வில் எத்தனையோ பேர்களை பிரித்தும்,சேர்த்தும் வைத்துக்கொண்டிருந்த அந்த ரயில் ஒரு நீண்ட சப்தமெழுப்பியபடி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு செல்ல ஆரம்பித்தது.
0 அன்பு உள்ளங்கள்....:
Post a Comment