இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
காதல் பயணங்கள்
என்றும் நிரம்பி வழியும் நெல்லையின் புதிய பேருந்து நிலையம் அன்று ஆர்ப்பாட்டமின்றி ஆறுதலாயிருந்தது.தென்காசிக்கு கிளம்பத் தயாராய் எப்பொழுதும் இரண்டு மூன்று பேருந்துகள் நிறைமாத கர்ப்பிணியாய் நிற்கும்.அன்று கூட்டமில்லாததால் காலியாயிருந்த பேருந்தில் ஏறியமர்ந்தேன்.அடுத்தடுத்து ஏறி வரும் மனிதர்கள் எப்பொழுதும் தனி இருக்கைகளையே விரும்பினர்.என் பக்கத்து இருக்கை இன்னும் காலியாக இருந்தது.சன்னலின் வழியே கண்களை சுழட்டினேன்.எத்தனை மனிதர்கள்?? தன்னைக் கடந்து செல்வோரிடம் சில புன்னகைகள், சில வருத்தங்கள், சில சங்கடங்கள் சிந்திச் சென்றனர்.
பேருந்து கிளம்பத் தயாரான கடைசி நிமிடங்களில் என்னருகில் இருந்த காலி இருக்கை நிரப்பப்பட்டது.ஓடி வந்து ஏறியமர்ந்தது ஒரு பெண்.அவளை அடுத்து ஓடிவந்து ஏறினான் ஒரு பையன்.ஏறியபின் அவன் அவளைப்பார்த்து சிரித்தான்.அவள் அவனைப்பார்த்து சிரித்தாள்.’ஆகா… கச்சேரி ஆரம்பிக்கபோகுது”என்று மனதுக்குள் சிரித்துக்கொண்டேன் நான்.
பேருந்து நகர ஆரம்பித்தது.தென்காசி நோக்கிய சாலையில் வேகமெடுத்தது.மாலையின் மெல்லிய தென்றலோடும் பேருந்தில் வழிந்த பாடலோடும் பயணிக்க ஆரம்பித்தோம். நான் அதோடு கச்சேரியையும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.இவ்வாறு அமையும் பயணங்கள் எவ்வளவு சுவாரசியமானவை?? காத்திருந்தேன்.
அவன் தான் பேச ஆரம்பித்தான்.
“எக்ஸாம் எப்படிடி எழுதிருக்க??” – ‘ஆரம்பமே ’டி’யில் இருக்கே?’
“ஏதோ எழுதிருக்கேன்டா.. பயமா இருக்கு” – அந்த “டா”வில் அதிக உரிமை தெரிந்தது.
“டா போட்டுக் கூப்பிடாதேனு எத்தனை தடவை சொல்லிருக்கேன்..”
“அப்படித்தான்டா டா போட்டுக் கூப்பிடுவேன்.. நீ மட்டும் டீ போடலாம்.. நான் போடக்கூடாதா” – ‘அதானே?? ஆனாலும் சரியான வாயாடியா இருப்பாளோ?’
“உன்ன திருத்த முடியாதுடி.மொபைல்க்கு ரெஸ்ட் கொடுக்காம மூளைக்கு ரெஸ்ட் கொடுத்தா ரிசல்ட் பத்தி பயப்படத்தான் செய்யனும்”
“அய்யோடா.அத நீ சொல்லாதடா”
“ஐயா படிச்சு முடிச்சாச்சு. இப்போ வேலை வேற பாக்கறேன்.நான் மொபைல் வச்சிருக்கறதுக்கு நூறு சதவிகிதம் உரிமை இருக்கும்மா” – அந்த “ம்மா” வில் இன்னும் அதிகம் உரிமை கொடுத்தான்.
அவள் முறைத்தாள். “என்னால மொபைல் இல்லாம இருக்க முடியாதுடா. ஹாஸ்டல்ல இது ஒண்ணு தான் டைம் பாஸ். அப்புறம் அது இருந்தாதேனே உன்கிட்ட பேசமுடியும்??”
“இதையே காரணம் சொல்லு” - அவன் சிரித்தான்.
அவர்கள் என்னென்னவோ பேச என்னுடைய காதல் கண்முன் நிழலாடியது.இதைப்போலொரு பயணத்தில் தான் அவனை சந்தித்தேன்.வேகமாய் ஒடிவந்து யார் இருக்கிறார்கள் என்று தெரியாமல் என் பக்கத்து இருக்கையில் நிரம்பினான். நான் முழித்தேன்.ஆசுவாசப்படுத்தி மெதுவாய் திரும்பி பின் அதிர்ந்து எழுந்தான்.
“மன்னிச்சிடுங்க. நான் பாக்காம உக்காந்துட்டேன்.” – படபடப்பாய் வெளிவந்தன வார்த்தைகள். என்ன சொல்வதென்று தெரியாமல் மண்டையை ஆட்டிவிட்டு தலையைத் திருப்பிக்கொண்டேன்.முதல் சந்திப்பு இப்பவும் புன்னைகைக்க வைக்கிறது.
மறுநாள் அதே இருக்கையில் நான்.ஆனால் அவன் சுதாரித்துக்கொண்டான்.மெலிதாய் புன்னகைத்தான். கூடவே நானும். புன்னகைகள் அறிமுகமாகி காதலாய் வளர்ந்தது.அந்த பயணங்கள் மறக்க முடியாதவை.எங்கள் காதல் வளர்த்த பயணங்கள் அவை.
திடீரென்று அந்த பெண் அவன் தலையில் நோட்டால் அடிக்க, என் கவனம் சிதறியது.
“சொல்லுடா..வீட்டுக்கு எப்போ வர??”
“வீட்டுக்கா?? விளையாடறியா?? உங்க அப்பாவ பாத்தாலே பயமா இருக்கு”
“இப்படி பயந்துட்டே இரு.என்னைக்கு தான் நீ திருந்த போறியோ? நான் வேணா அப்பா கிட்ட பேசவா??”
“வேணாம் வேணாம்.பிரச்சனையாகிடும்.கொஞ்ச நாள் போகட்டும்.பாக்கலாம்.சரி,தம்பி, தங்கச்சிலாம் எப்படி படிக்கறாங்க?”
“படிக்கறாங்க. நான் வேலைக்கு போனா தான் அவங்கள அடுத்தடுத்து காலேஜ்க்கு அனுப்ப முடியும்.லோன் வேற இருக்கு. நீ சென்னைல உன் கம்பெனிலயே எனக்கு ஒரு வேலை பாருடா”
“ நானாடி கம்பெனி நடத்தறேன்?? பாக்கலாம். நான் இருக்கேன்ல. கவலைப்படாத”
“ டேய்.. நான் சென்னை வந்தா என்ன வெளில கூப்பிட்டு போவியா??
பீச், தீம் பார்க்?? அதெல்லாம் நான் பார்த்தே இல்லடா”
முறைத்தான்.
“ஊர் சுத்தறதுலயே இரு” – ‘என்ன பையன் இவ்ளோ கறாரா இருக்கான். நல்ல பையன் போலருக்கு. ‘
புன்னகைத்தேன். நல்ல காதல் ஜோடிகள்.பார்க்கவே சந்தோசமாயிருந்தது.
“சரி சரி.. புலம்பாதடா. எனக்கு கடைசி செமஸ்டர் ப்ராஜக்ட் பண்ணனும். நினைவுல இருக்கா?” – அவள்.
அவன் வாய்விட்டு சிரித்தான்.
“ நீ பண்ண போற ப்ராஜக்ட்ட நான் ஏன் ஞாபகத்துல வச்சுக்கனும்?”
இப்போ அவள் முறைத்தாள்.
” நீ தானடா நான் பாத்துக்கறேனு சொன்ன?? நீ எப்பவும் இப்படித்தான்டா.. நம்பினா காலைவாரி விடற..”
"இவ்ளோ வாய் பேசறல?? நீயே எங்கயாவது போய் பண்ணு"
"அப்போ நீ ஹெல்ப் பண்ண மாட்ட??"
"எனக்கு ஆயிரம் வேலை இருக்கு. இதெல்லாம் பாக்க எனக்கு நேரம் இல்ல. நான் அடுத்த வாரம் டெல்லி வேற போகணும்"
"ஏன் அங்க யாரையாவது செட் பணி வச்சுருக்கியா??"
"அடிப்பாவி.. உன் புத்தி உன்னைவிட்டு போகாதே? சரி சரி.. நீ இப்போ புலம்பாத.. நான் இருக்கேன்ல.. பாத்துக்கறேன்.. ”
அவள் சிரித்தாள்.
“குட் பாய்”
“இந்த சர்டிபிகேட்க்கு ஒன்னும் கொறச்சல் இல்ல” – அவனும் சிரித்தான்.
நான் மெலிதாய் புன்னகைத்தேன். எவ்வளவு நம்பிக்கையான வார்த்தைகள்? அவனும் கூட இப்படித்தானே நம்பிக்கையூட்டினான்?? உனக்கு நான் இருக்கிறேனென்று.ஆனால் நடந்தது வேறு.
சோதிடம் காரணமாய் எங்கள் காதல் பயணத்தை கல்யாணத்தில் முடிக்க அவன் சொன்னபோது எனக்கு இன்னும் சில வருடங்கள் தேவைப்பட்டது என் தம்பிக்காகவும், தங்கைகளுக்காகவும்.அவ்வருடங்கள் வரை பொறுக்க அவன் சாதகமும் சாதகமாயில்லை குடும்பமும் சம்மதிக்கவில்லை.இன்று அவன் இன்னொருவளின் கணவன். நான் அவனின் முன்னாள் காதலி.தம்பி, தங்கைகள் தங்கள் வழிகளைத் தேடி அவர்கள் வழித்துணையுடன் பயணிக்க ஆரம்பித்துவிட்டனர். நான் காதோரம் நரைத்த தலைமுடியுடன் இப்படி காதல்கள் பார்த்தவாறு தனியாய் பயணிக்கிறேன்.
பேருந்து தென்காசிக்குள் நுழைந்தது.அவர்கள் கிளம்பத் தயாராயினர். குடும்பச்சுமையுடன் உன் காதலையும் காப்பாற்றிக்கொள் என்று அறிவுறுத்த திரும்பினேன்.இன்னும் பேச்சு நின்ற பாடில்லை.
“ நீயும் வீட்டுக்கு வரியாடா?” – சிரிப்புடன் கேட்டாள் அவள்.
முறைத்த அவன்,”டா டானு கூப்பிடாதனு எத்தனை தடவ சொல்லிருக்கேன்.இனிமே கூப்பிட்டா தங்கச்சினு கூட பாக்க மாடேன்.பளார்னு ஒண்ணு வைப்பேன்.முதல்ல சித்திக்கிட்ட சொல்லி உன் வாய குறைக்க சொல்லனும்”
“குடும்ப சண்டைல எங்க அப்பாகிட்ட பேசலனா என் அம்மாகிட்டயும் பேசக்கூடாதுடா இடியட் அண்ணா”
முழித்தேன்.’அடக் கடவுளே?? என்ன வேலை பார்க்க போனேன்??’ சட்டென்று சிரித்துவிட்டேன். மெதுவாய் திரும்பிய அந்த பெண் வித்தியாசமாய்ப்பார்த்தாள். இருந்தாலும் புன்னகைத்தவாறு இறங்கினேன்.
ஒவ்வொரு பயணத்திலும் என்னோடு என் காதலும் இன்னும் பயணித்துக்கொண்டிருக்கிறது. பயணங்கள் முடிவதில்லை என் காதலைப்போல.
நடந்தபடியே திரும்பிப் பார்தேன். அந்த அண்ணன் அவள் தங்கைக்கு பேக்கரியில் ஏதோ வாங்கிக்கொடுத்துக்கொண்டிருந்தான்.
==========================================================================================================
பெயர்:
சுரபி
மின்னஞ்சல்:
amio.praba@gmail.com
8 அன்பு உள்ளங்கள்....:
அழகான நடை. கடைசியில் திடீர் திருப்பம். சுவாரசியமாக முழுவதும்...வெற்றி பெற வாழ்த்துக்கள்.
தங்கள் வாசிப்பிற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி.. :-)
நம்ம சமூகத்துல ஆணும் பெண்ணும் பேசினாலே காதல்தான்னு ஒரு முடிவுக்கு வந்துடுறாங்க. இந்த அச்சம் இருக்குறதாலத்தான் நண்பர்கள்தான்னு நினைச்சுகிட்டு பழகுனா கூட அவங்கள அறியாம காதல்ல விழுறவங்க எண்ணிக்கை அதிகமா இருக்கோன்னு நினைக்கிறேன்.
பல வருஷங்களுக்கு முன்னால எங்க உறவினரும் அவரோட தங்கையும் பேருந்துல வரும்போது ஒரு போலீஸ்காரர் சந்தேகப்பட்டு பிடித்து அடித்தும் விட்டார். பிறகு ஒரு அரசியல் புள்ளியின் மூலம் தவறுக்கு மன்னிப்பு கேட்க வைத்தோம். இப்படியும் பார்வைப் பிழை இருக்கிறது.
அருமையான துவக்கம் ..
இடையில் சின்ன பிளாஷ்பேக்
அருமையான திருப்பமும் கூட..
ஆம்.. ஆண் பெண் நட்பாக பழகுவது என்பது அவ்வளவு கடினமா??
அல்லது இந்த சமூகத்திற்கு அப்படி இருக்கும் நட்பை பற்றி தெரியாதா?
ஏன் இப்படி மாறி வருகிறது?
யார் காரணம்? என்று யோசிப்பதை விடுத்து, நாம் நமது தோழிகளிடத்தில்/ தோழர்களிடத்தில் நட்பாக பழகுவோம்.. இந்நிலை நிச்சயம் ஒரு நாள் மாறும்..
சமுதாயத்தின் சிறு குறையை பயணத்தின் வாயிலாக சுட்டி காட்டியமைக்கு மிக்க நன்றி தோழி..
அவ்வளவு யதார்த்தமான வார்த்தைகள் / உரையாடல்கள்..
Thanks for reading n posting comments saran and theiventhiran.... :)))))))
rompa nallaa irukku thozhi.. வெற்றி பெற வாழ்த்துக்கள்..
சிம்ப்லி குட்..!
தங்கள் நேரத்திற்கும் கருத்திற்கும் நன்றி ஆறுமுகம், இளங்கோ..
ரொம்ப மகிழ்ச்சி..:))))))
Post a Comment