மனதில் காதல் – சுழலும் சுற்றலும்....
ஆள் கூட்டம் அதிகமுள்ள புகை வண்டி..
உட்கார ஓர் இடம் தேடி உள்ளுக்குள் நான் ஓடிக்கொண்டிருந்தேன்.
இருப்பிடம் தேடி என் கண்ணின் கிருஷ்ண மணிகள் அங்கும் இங்கும் உருண்டோடிக் கொண்டிருந்தன.
பார்வையை சுழல விட்டேன்…
பட்டென்று பதிவு போல் பார்வை ஒரு இடத்தில் நிலைத்து நின்றது.
நான் அந்த இடத்தி நோக்கி… மெதுவாக நகரத் துவங்கினேன்.
காரணம் வேறொன்றுமில்லை… அந்த இடத்தில் ஒரு அழகு தேவதை அமர்ந்திருந்தாள்..
அவள் அணிந்திருந்தது…ஜீம்ஸ் பேண்ட்டும் டீ சர்ட்டும்.
மனதுக்குள் நினைத்தேன்… ம்ஹூம்… இந்தக் காலத்துப் பெண்கள்…இவர்களது வேடம்..
அழகாக..கண்ணியமாக நல்ல சுடிதார் அல்லது சேலை அணிந்து வந்தால் என்ன…
வானம் இடிந்தா வீழப் போகின்றது…
அகங்காரம்.. அது அவளது முகத்தில் எழுதி ஒட்டி வைத்தது போல் தோன்றியது..
என்ன செய்ய…நாகரீகத்தின் யுவ தலைமுறைகள்…நமக்கென்னா???
ஓரக்கண்ணால் அவளை ஒரு நோட்டம் விட்டேன்.. அழகாகத்தான் இருக்கிறாள்..
நிமிடங்கள் நகர்ந்தன… திடீரென அவள் பதிலடியாக திரும்பி என்னை ஒரு நோட்டம் விட்டாள். திரும்பிப் பார்த்தேன்… என் அருகில் இள வயதினர் யாரும் இல்லை.
சுற்றிலும் முதியவர்களும்…பெண்களும் மட்டுமே.. மீண்டும் திரும்பி என்னை ஒரு நோட்டம் விட்டாள்.
காலில் இருந்து தொண்டை வரை ஜில்லென்று ஒரு ஐஸ் பந்து உருண்டோடியது….
என் சிந்தைகள் மாறத் துவங்கியது.
ஜீன்ஸ் பேண்ட்டும் டீ சர்ட்டும் அவ்வளவு மோசமான உடைகள் இல்லை.. சேலை, சுடிதார் இரண்டையும் விட..மறைக்க வேண்டிய இடங்களை மறைக்க இது எவ்வளவோ மேல்… உண்மைதான்..
என் கணக்கு மீண்டும் ஒருமுறை தவறி விட்டது..
என் பார்வையில் இப்போது அவளது முகத்தில் அகங்காரம் இல்லை.
நளினம்… சாந்தம்… பெண்மையின் இலக்கணம்.. இது எல்லாம் கலந்த ஒரு கலவை போல்….
அவள் வெறுமனே இருக்கவில்லை.
பக்கத்தில் இருந்த பிஞ்சுக் குழந்தையை அடிக்கடி கொஞ்சுவாள்..
பிறகு என்னை ஒரு நோட்டம் விடுவாள்..
அவ்வப்போது ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருப்பாள்.
அப்படியே என்னை ஒரு நோட்டம் விடுவாள்.
ஒவ்வொரு முறை அவள் ஏதாவது செய்யும்போதும்… எனக்கு ஒரு பார்வை…இலவசம்.. பிரசாதம் போல்…
இதில் விசேசம் என்னவென்றால்… நான் அவளைப் பார்த்தது ஒரே ஒரு முறைதான்… ஆனால் கொஞ்சம் நீளம் கூடிய பார்வை…அவ்வளவுதான்.
அவ்வப்போது…அவள் எனைப் பார்த்து புன்முறுக்க…நானும் புன்னகை மன்னனாய் மாறியிருந்தேன்…
அவள் ஹிந்தியில் பேசிக்கொண்டிருந்தாள்.
நான் நினைத்தேன்… கடவுளே… நான் இவளைத் திருமணம் செய்தால்… என் நிலைமை என்னவாகயிருக்கும்???.
அருகில் அமர்ந்திருந்த முதியவரிடம் அவள் பேசுவதைக் கவனித்த போது புரிந்தது.. அது அவளது தந்தை என்று..
சாந்தி… மஹாலட்சுமி…பாரிஜாதம்…நடராஜன்,….இவர்களுக்கெல்லாம் மனதில் நன்றி சொல்லிக் கொண்டிருந்தேன்..
(ஐந்து முதல் பன்னிரெண்டு வரை எனக்கு ஹிந்தி கற்றுக் கொடுத்த தெய்வங்கள்)
ஹிந்திப்பட ஹீரோ போல் சந்தோஷமாக வெளியே.. பார்த்தேன்..
திக்…திக்..அடக் கடவுளே… இன்னும் ஐந்து நிமிடத்தில் நான் இறங்க வேண்டிய இடம் வந்து விடும்…
அவளைப் பார்த்தேன்…முகம் களையிழந்து, வாடியிருந்தது….
அப்போது அவளுக்கும் புரிந்திருக்க வேண்டும்…
ஒன்று…இரண்டு.. மூன்று..நான்கு..ஐந்து…
இதோ..வண்டி நின்று விட்டது…
கனத்த மனதுடன் நான் இறங்கி.. நடக்க ஆரம்பித்தேன்..
அவள் ஜன்னல் வழியாக என்னையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது..
இதயம் வெடிப்பது போல் இருந்தது… நாங்கள் பிரிந்து விட்டோம்…
வெறும் ஒன்றரை மணி நேரம் மட்டுமே ஆயுள் கொண்ட காதல்… இதோ இங்கே முடிந்து விட்டது…
மின்சாரம் போன மின் விசிறியின் சுழற்சி போல்…தளர்ந்த மனதுடன் வீட்டிற்குச் செல்லும் பேருந்தினுள் ஏறினேன்..
ஆஹா..ஹா… என் கண்கள் விரிந்தன…
பேருந்தினுள் வேறொரு அழகு தேவதை…என்னையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள்…
மின்சாரம் கிடைத்த மின் விசிறியின் சுழற்சி போல் இப்போது… மனது..
அடுத்த ஒரு மணி நேரம் மட்டுமே ஆயுள் உள்ள மற்றொரு காதலுடன் என் பயணத்தைத் துவங்க ஆரம்பித்தேன்…
ITSME&MYSELF
WWW.ITSME&MYSELF.BLOGSPOT.COM
1 அன்பு உள்ளங்கள்....:
Simply superb.. And vaalviyal etharththam ithu thanga.. romba arumai..
vaalthugal.. :)
Post a Comment