மாலை 6.00 மணி, பேருந்து நிலையத்தில் கிருஷ்னசுவாமியை தன் மகனுடன் பைக்கில் வந்து இறக்கினார். இருவரும் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு மதுரை பஸ்சை நோக்கி நடந்தனர். மகனுக்கு வயது 15 இருக்கும், தன்னுடைய அப்பாவின் பெட்டியை தூக்கிக் கொண்டு வந்தான். இதை அனைத்தும் பஸில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்த ஜானகிக்கு தூக்கிவாரிப் போட்டது. இவர்கள் பஸ்சை நோக்கி வருவதை பார்த்து, ஜானகி பஸ்சை விட்டு இறங்கி விடலாமா?, என்று யோசித்தாள். ஆனால் அதற்க்குள் கிருஷ்னசுவாமி பஸ்சை நெருங்கி விட்டார். ஜானகிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, தன்னுடைய முந்தானையில் தன் தலையை மூடிக்கொண்டாள்.
"சரிப்பா, மதுரைக்கு போனதும் மறக்காம போன் பண்ணுங்கப்பா, பாத்து நைட்ல எங்கையும் தனியா இறங்காதீங்க" என்றான் மகன்.
கிருஷ்னசுவாமி சிரித்துக் கொண்டே "சரிங்க தாத்தா, நான் பத்தரமா போறேன் நீங்க வண்டிய ஸ்பீடா ஓட்டி போலீஸ் கிட்ட மாட்டீக்காம போங்க. லைசன்ஸ் வேற இல்லை உன்கிட்ட" என்றார்.
"அதெல்லாம் நான் பாத்துக்குறேன் டாடி, பாய் டாடி" என்று அப்பாவின் தோளை கட்டிபிடித்தான் மகன்.
"ஒ.கேடா பாய், அம்மாவையும், வீட்டையும் பத்திரமா பார்த்துக்கோ நைனா" என்று ஏசி பேருந்தில் ஏறினார் கிருஷ்னசுவாமி.
தன்னுடைய சீட் நம்பரை தேடினார். (நிற்க அவரின் சீட்டு நம்பர் எதாவதாக இருந்தால் கதை இத்துடன் முடிந்து விடும், அதனால் அவரின் சீட் ஜானகியின் பக்கத்து சீட்டாக இருக்கட்டும்). . அவர் சீட்டை தேடிச் சென்றார் பக்கத்து சீட்டில் ஏதோ ஒரு பெண் உக்கார்ந்து இருப்பது அவருக்கு அசெளகர்யமாக இருந்தது. நடத்துனரை தேடினார், இல்லை
சரி அவர் வந்தவுடன் வேறு எதாவது சீட்டுக்கு நாம போய்டலாம்னு என்று நினைத்துக் கொண்டு உக்கார்ந்தார். ஜானகிக்கு இன்னும் வேர்த்தது, அவள் முகத்தை மறைத்து தூங்குவது போல நடித்தாள். இவரும் அந்த பெண்ணின் பக்கம் திருப்பவில்லை. பஸ் புறப்பட்டது. ஜானகிக்கு அந்த ஏசியிலும் வேர்த்தது, ஆண்டவா இன்னும் 12 மணி நேரத்தை நான் எப்படி கடப்பேன் என்று நினைத்தாள். நடத்துனர் ஒவ்வொரு சீட்டாக டிக்கெட் பரிசோதனை செய்துக் கொண்டு வந்தார். கிருஷ்னசுவாமி தன்னுடைய பர்ஸை எடுத்து டிக்கெட்டை தேடினார் இருட்டாக இருந்ததால் தன்னுடைய சீட்டுக்கு மேல் இருந்த சின்ன விளக்கை போட்டு அதன் வெளிச்சத்தின் அடியில் பர்ஸை வைத்து தேடினார். ஜானகி அதை ஒற்றைக் கண்னால் பார்த்தாள். அவளுக்கு அதிர்ச்சி, ஆச்சர்யம், அழுகை எல்லாம் பீறிட்டு வந்தது. ஏனென்றால் அவளின் புகைப்படத்தை கிருஷ்னசுவாமி இன்னும் பத்திரமாக பர்ஸின் அதே இடத்தில் வைத்து இருந்தார். டிக்கேட் கிடைத்தது. ஜானகிக்கு அழுகை முட்டியது.
"எப்படி இருக்குற கிருஷ்ணா" என்றாள் ஜானகி இருட்டில். இவருக்கு இருட்டில் முகம் அவ்வளவாக தெரியவில்லை, தோராயமாக
"ஆ செளக்கியம், நீங்க யாருன்னு ....தெரிய....". என்றார். ஜானகி அவளுக்கு மேல் இருந்த விளக்கை போட்டாள்.
இவருக்கு நெஞ்சு படபடத்தது, கண்களில் நீர் வழிந்தது
"ஜா....ஜா...ஜானகி நீ நீயா"
அவள் ஆம் என்பது போல தலையை அழுகையை அடக்கிக் கொண்டு ஆட்டினாள்.
"என்ன ஜானகி எப்படி இருக்க, எ...என்னால நம்ப முடியல" என்று உதட்டோரம் புன்னகை செய்தார்.
அவள் ஒன்றுமே சொல்லாம அப்படியே கிருஷ்னாவை பார்த்துக் கொண்டு இருந்தாள்.
" என்ன ஜானகி, என்ன ஆச்சி எதாவது பேசு"
பெருமூச்சுடன் "ஹம்... என்ன ஒரு இருபது வருஷம் இருக்குமா?" என்றாள், அதற்க்குள் நடத்துனர் வந்து டிக்கெட்டை பரிசோதனை செய்து முடித்து விட்டு போனார்.
கிருஷ்னசுவாமியும் பெருமூச்சி விட்டவராக "20 வருடம் 8 மாசம் 16 நாள், இன்னைக்கு சேர்க்காம"
ஜானகி ஆச்சர்யமாக பார்த்து "உன்கூட நான் இருந்த நாட்கள் என் வாழ்க்கையின் வசந்தமான நாட்கள், நீ என்ன எப்படி பார்த்துபே தெரியுமா?"
"உனக்கு அதெல்லாம் நியாபகம் இருக்கா"
"இதை மறந்துட்டு பின்ன எத நியாபகம் வச்சினு இருக்க சொல்ற. உன் அன்பை எப்படி நான் மறப்பேன், என்னை நீ தங்கதட்டில் தாங்கியதை எப்படி நான்.......... சொல்லவா?. காலேஜ் பஸ்ல நீ எனக்காக ஜன்னலோர சீட்டு பிடிச்சி வைப்பியே அதை சொல்லவா, இல்ல எனக்கு வயித்து வலின்னதும் எப்படியாவது மோரும், ஒரு கைபிடி வெந்தையமும் கொண்டு வருவீயே அதை சொல்லவா....." என்று மேலே பேச முடியாமல் அழுதாள்.
கிருஷ்னாவுக்கும் அழுகை வந்தது கண்களை துடைத்துக் கொண்டு
"ச்சீ என்ன இது சின்ன புள்ள மாதிரி அதெல்லாம் நாம எதோ சின்ன வயசுல பண்ணினது, இப்போ நமக்கு அந்த வயசுல பசங்க இருக்காங்க. நான் அதெல்லாம் எப்பவோ மறந்துட்டேன், நீ இன்னும் அதை நினைச்சினு இருக்குறது எனக்கு சிரிப்பா இருக்கு ஜானகி"
"ஓ குட், அப்புறம் எதுக்கு என் போட்டோவை இன்னும் உன் பர்ஸ்ல வச்சி இருக்க கிருஷ்ணா"
அவருக்கு சுளீர் என்றது, ஜானகியின் முகத்தை பார்க்க முடியவில்லை, தலையை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டார். ஜானகி கிருஷ்னாவின் கன்னத்தை பிடித்து அவள் பக்கம் திருப்பினாள்
"சொல்லு கிருஷ்னா" என்றாள்.
அவர் ஜானகியின் கண்களை பார்த்து
" உன்னுடைய வாசனை இன்னும் மாறவே இல்லை". என்றார்.
இவரும் நெருங்கி உக்கார்ந்தனர். ஜானகி அவளை அறியாமல் அந்த வயதிலும் வெட்கப்பட்டாள். கிருஷ்னாவின் கன்னத்தில் இருந்த அவளின் விரல்கள் பொறுமையாக அவனின் உதடுகளை நோக்கி இறங்கின, கிருஷ்னாவின் உதடும் அதை தான் எதிர்பார்த்தது, ஆனால் தீடீர் என்று இருவரும் சுயநினைக்கு திரும்பினார்கள், சுதாரித்துக் கொண்டனர், இருவரும் சீட்டிலும் கொஞ்சம் இடைவெளி விட்டு அமர்ந்தனர். கிருஷ்னா, கிருஷ்னசுவாமியாக உணர்ந்தார். கொஞ்ச நேரம் கனத்த மெளனம், இருவரும் வேறு வேறு பக்கம் தர்மசங்கடத்தால் முகத்தை திருப்பிக் கொண்டனர். பிறகு ஜானகி ஆரம்பித்தாள்
"ஆமா கிருஷ்ணா உங்களை டீராப் பண்ணது யாரு, உங்க பையனா"
"ஆமா நீங்க பார்த்தீங்களா?"
"ஆ....பையன் உங்கள மாதிரியே அழ..க..., உங்கள மாதிரியே இருக்கான், என்ன வயசு"
"15 வயசு ஆவுது, ஓரே பையன் தான், நேத்து தான் பொறந்த மாதிரி இருக்கு. இன்னைக்கு என்ன வச்சி வண்டி ஓட்டுறான், நான் பஸ்ஸுல எங்க எறங்கனும், ஏறனும் சொல்லி கொடுக்குறான்" என்று வாய் விட்டு சிரித்தார், ஜானகியும் சிரித்தாள்.
"என்னுடைய பையனும் தான் போன மாசம் என்னை அப்படியே தூக்கி சுத்தறான், அவங்க அப்பாவே என்ன தூக்கினா கீழே விழுந்துடுவாரு" என்று சிரித்தாள். இவரும் ரசித்து சிரித்து
"ஆமா சார் எப்படி, உங்கள நல்லா பார்த்துக்கறாரா?"
"அவர் ரொம்ப நல்லவர், அதிர்ந்து கூட பேச மாட்டார். நான்-னா அவருக்கு உயிரு"
"குட் ரொம்ப சந்தோஷமா இருக்கு". இருவரும் அந்த இரவு முழுக்க பார்த்துக் கொண்டும், பேசிக் கொண்டு கடத்தினர்.
காலை மதுரையை வண்டி அடைந்தது இருவரும் உதட்டில் மட்டும் சிரித்துக் கொண்டு, உள்ளத்தை அதே இருக்கைகளில் விட்டு விட்டு, பிரியா விடைப் பெற்று வண்டியில் இருந்து இறக்கினார்கள். ஜானகியின் கணவர் காரில் காத்துக் கொண்டு இருந்தார்.
"யாரீ அவன், சிரிச்சுனே வர"
"யாருனு தெரியாதுங்க, என் பெட்டியை எடுக்க உதவி செஞ்சாரு, அதான் தாங்க்ஸ் சொல்லிட்டு வந்தேன்". இருவரும் கண்கள் அளவில் பிரிந்தனர்.
இரண்டு நாள் கழித்து கிருஷ்னசுவாமி வீட்டில் குளித்துக் கொண்டு இருக்கும் பொழுது
"ஜானகி அந்த டவலை கொஞ்சம் எடுத்து கூடுமா" என்றார் குளியல் அறையில் இருந்து. சமையல் அறையில் இருந்து வந்த அவரின் மனைவி மீனாட்சி
"என்னது ஜானகியா, அது யாருங்க ஜா...ஜானகி..கீ..கீ" என்று ஒரு இழு இழுத்தாள்.
குளியல் அறையில் மயான அமைதி. இளைஞன், இளைஞி என்பது வயதில் இல்லை அவர் அவர்களின் நினைவில் இருப்பது.
தக்ஷ்ணாமூர்த்தி
1 அன்பு உள்ளங்கள்....:
பயணங்கள் முடிவதில்லை...நம் மனதின் பசுமையான எண்ணங்களும் மறைவதில்லை...
Post a Comment