இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
பட்டும் திருந்தாத ஜென்மங்கள்
தடதடத்து ஓடிக் கொண்டிருந்தது ரயில். முகத்தில் அறைந்த குளிர் காற்று மனதுக்கு இதமாய் இருந்தது. தாரை தாரையாய் வெளியே பெய்து கொண்டிருந்த மழையின் துளிகள் என் முகத்தில் தெறித்து விழுந்தன . மழையை ரசிப்பவன்தான் என்றாலும் மழையில் நனைவது ஏனோ பிடிக்காது. கதவை சார்த்தி விட்டுத் திரும்பியபோதுதான் அவளைப் பார்த்தேன். ரயிலின் மற்றொரு வாசலின் ஆபத்தான விளிம்பில் நின்று கொண்டிருந்தாள்.
"ஏய்.. அங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க.. விழுந்து கிழுந்து தொலைச்சிட போற.."
நான் கத்தியதை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. அனிச்சையாக உடம்பு பின்வாங்க ரயிலின் உள்ளே வந்தாள். அவளருகே சென்றேன். இப்போது அவளை நெருக்கத்தில் கூர்ந்து பார்க்க முடிந்தது. அழகாக இருந்தாள். உடைகளில் ஏழ்மையின் சாயல்தெரிந்தது.
"என்ன.. தற்கொலையா?"
"....."
"கேக்குறேன்ல.."
அவள் தலை குனிந்து நின்றாள். அழுது கொண்டிருக்கிறாளா? சுற்றிலும் பார்த்தேன். கம்பார்ட்மெண்டில் இருந்த கொஞ்ச நஞ்ச பேரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
"சரி.. எதுன்னாலும் பொறுமையா பேசிக்கலாம்.. மொதல்ல உள்ளே வந்து உக்காரு.."
அவள் உள்ளே வந்தாள். கண்களைத் துடைத்துக் கொண்டு என் எதிரே அமர்ந்தாள். என்னெவென்று வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒரு அமைதி அங்கே நிலவியது.
"உன் பேர் என்னனாவது நான் தெரிஞ்சிக்கலாமா?"
"....."
"போச்சுடா.. இதுக்கும் அமைதிதானா? நீ என்ன ஊமையா?"
"........."
ooOoo
"கிருஷ்ணவேணி.."
சடாரென்று நான் பேசுவேன் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.
"சொந்த ஊரு சிவசைலம்னு திருநெல்வேலி பக்கத்துல ஒரு கிராமம். அப்பாவுக்கு மளிகைக் கடை. நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு. டைலரிங் கத்துக்கப் போன இடத்துலதான் மொதமொதலா ராஜாவைப் பார்த்தேன். பின்னாடி சுத்தி சுத்தி வந்தான். காதல்னு சொன்னான். நம்புனேன். எங்கப்பா கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாரு. வேற வழியில்லாம வீட்ட விட்டு மதுரைக்கு அவன் கூட ஓடி வந்துட்டேன். அதுக்கப்புறம் தான் தெரிஞ்சது, அவன் ஆசைப்பட்டது என்னோட உடம்புக்கும் நகைக்கும்தான்னு.. அவன்கிட்ட இருந்து தப்பிச்சு வந்து இந்த டிரைன்ல ஏறிட்டேன்.. ஆனா அடுத்து என்ன பண்றதுன்னு தெரியல.. அதான் செத்துப் போய்டலாம்னு...ஓ.ம்.ம்.ம்.ம்.ம்
என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் ஆதரவாக என்னருகே வந்து அமர்ந்தார்.
"மறுபடி உங்க வீட்டுக்குப் போறியா?"
"நான் மாட்டேன்.. எங்கப்பா என்னை வெட்டியே போட்டிருவாரு.."
சிறிது நேர அமைதிக்குப பிறகு கேட்டார்.
"என் கூட என் வீட்டுக்கு வா.. அங்க பத்திரமா இருக்கலாம்.."
இந்தக் காலத்திலும் இப்படிப்பட்ட நல்ல மனிதர்கள் இருக்கிறார்களா? நான் சட்டென்று அவர் கால்களில் விழுந்தேன். என் தோளைத் தொட்டுத் தூக்கினார்.
"உங்க பேர் என்னன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?"
ooOoo
"செல்வம்.."
யார் கூப்பிடுவது என எட்டிப் பார்த்தேன். வெளியே திவாகர் நின்றிருந்தான். பக்கத்து வீட்டில் வசிப்பவன். என்றாவது ஒரு நாள் டைரக்டர் ஆகும் கனவில் இருப்பவன். என்னைப் போலவே அநாதை.
"என்ன திவா?"
"வேணி மேடம் புக் கேட்டிருந்தாங்க.. அதுதான் கொடுத்துட்டுப் போகலாம்னு.."
"கோவிலுக்குப் போயிருக்கா.. டேபிள் மேல வச்சிட்டுப் போ.."
வந்து கொஞ்ச நாட்களே ஆகியிருந்தாலும் கூட வேணி சுற்றி இருக்கும் மனிதர்களோடு நன்றாகப் பழகி விட்டாள். யாரெனக் கேட்டவர்களிடம் உறவுக்காரப் பெண் என்று சொல்லி சமாளித்து விட்டேன்.
என்னுடைய வழக்கங்களும் நிறையவே மாறத் தொடங்கியதை என்னால் உணர முடிந்தது. இஷ்டப்பட்ட நேரத்து வீட்டுக்கு வருவதோ, கண்ட கண்ட இடங்களில் சாப்பிடுவதோ அறவே காணாமல் போனது. என் வாழ்வில் இருந்த வெறுமையை அவள் விரட்டி விட்டிருந்தாள். அவள் மீது எனக்கு தோன்ற ஆரம்பித்து இருந்த உணர்வு.. இதற்குப் பெயர்தான் காதலா..?
எத்தனை நாள்தான் காதலை மனதிலேயே பூட்டி வைப்பது? அவள் என்னை ஏற்பாளா? கூடிய விரைவில் அவளிடம் நேரடியாக சொல்லி விட வேண்டும். என்னால் முடியுமா?
ooOoo
"உங்களால கண்டிப்பா முடியும். நல்லா யோசிச்சு சொல்லுங்க.."
திவாகர் எனக்குள் ஒரு பூகம்பத்தை விதைத்து இருந்தான். அவன் சொன்னது எனக்கு கேட்டுக் கொண்டே இருந்தது.
"உங்க அழகுக்கு நீங்க மட்டும் சினிமால நடிச்சீங்க.. சான்சே இல்ல.. எங்கேயோ போய்டுவீங்க.. எனக்குத் தெரிஞ்ச டைரக்டர் புதுசா ஒரு ஹீரோயின் தேடிக்கிட்டு இருக்கார்.. நாம சொன்னாக் கேப்பாரு.. சொல்றத சொல்லிட்டேன்.. அப்புறம் உங்க இஷ்டம்.."
குழப்பமாக இருந்தது. அன்பைப் பொழியும் செல்வம் ஒரு பக்கம். பணம், புகழ் என்று ஆசை காட்டும் திவாகர் இன்னொரு பக்கம். நான் என்ன முடிவெடுக்க?
ooOoo
வேணி இப்படி ஒரு முடிவெடுப்பாள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தன்னை தேட வேண்டாம் என்று எழுதி வைத்து விட்டு காற்றோடு கரைந்து போயிருந்தாள்.
என் அத்தனை அன்பையும் உன் ஒருத்திக்காக சேமித்து வைத்திருந்தேனே.. ஏன்? பாழாய்ப் போன சினிமா ஆசைக்காக.. ச்சே.. கண்ணில்லாத ஒருவனுக்கு பார்வை கிடைத்து, மீண்டும் இரண்டே நாட்களில் பார்வை பறிபோனால் அவனுக்கு எப்படி இருக்கும்? எனக்கென இருப்பதாக நான் நம்பிக் கொண்டிருந்த ஒரே உறவும்... எனக்கு அழுகை அழுகையாக வந்தது.
ooOoo
எத்தனை சொல்லியும் மனது ஆறவில்லை. வேணி இல்லாத ஒரு வாழ்க்கை எனக்குத் தேவையில்லை. அவளை முதல் முதலாய் பார்த்த ரயிலிலேயே என் வாழ்க்கையை முடித்துக் கொள்வதென முடிவெடுத்தேன்.
அதே ரயில். என் கால்களின் கீழே அதே தடக் தடக்..என்னோடு என் கவலைகளும் சாகட்டும். கீழே குதித்து விட யத்தனித்தபோது.. ஏதோ சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். ரயிலின் மற்றொரு வாசலின் ஆபத்தான விளிம்பில் அவள் நின்று கொண்டிருந்தாள்.
"ஏய்.. அங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க.. விழுந்து கிழுந்து தொலைச்சிட போற.."
*************************
பிரியமுடன்,
மா.கார்த்திகைப் பாண்டியன்
www.ponniyinselvan-mkp.
2 அன்பு உள்ளங்கள்....:
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன்.?
நல்ல திரைக்கதை..
நன்றாக இருந்தது,..
Post a Comment