Monday, December 21, 2009

பரிசுப்போட்டி... சிறுகதை 21

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

மதுவந்தினி @ நெல்லை எக்ஸ்பிரஸ்...

"இன்னைக்கு வேலை அவ்வளவா இல்ல... கொஞ்சம் கம்மிதான்"

……
"ஆமா... ஆமா... ஊருக்குப் போறேன்.. சாயங்காலம்"

………
"ம்ம்ம்... நெல்லை எக்ஸ்பிரஸ்"

……..
"இல்ல.. யாரும் கூட வரல தனியாதான் போறேன்"

……..

"ம் ம் ம்.. சரி சரி வைக்கட்டுமா?" சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்தேன்.

எனது கணிணித்திரையின் வலது ஓரம் 3.35 PM காட்டிக் கொண்டிருந்தது. ம்ம்ம்.. கிட்டத்தட்ட ஆறு மாதம் கழித்து ஊருக்குப் போகிறேன். நினைக்கயிலேயே பரவசமாக இருந்தது. வேலை அவ்வளவாக இல்லை. ஒரு 7 மணிக்கு கிளம்பி ரயில் நிலையம் போனாலே போதும். இப்போதைக்கு பொழுது போகல. என்ன பண்றது? கூகிள் டாக்கில் பசங்க யாராவது இருந்தால் கொஞ்ச நேரம் மொக்க போடலாம். தேடிப்பார்க்கிறேன்... ஏதுவாக யாருமே இல்லை. என்ன பண்றது? அனிச்சையாய் அடிக்கிறேன்... ஓர்க்குட்.காம். வழக்கம் போல் எனக்கு எவனுமே எந்தச் செய்தியும் அனுப்பவில்லை. அப்படியே சொடுக்கியை மேலும் கீழும் சுற்றினேன்... "நியூயார்க்கில் முதல் பனிமழை..." "அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்" நண்பர்கள் எல்லாரும் ஏதேதோ ஸ்டேட்டஸ் செய்திகள் போட்டிருந்தார்கள். ஒன்றுமே மனதில் லயிப்பதாய் இல்லை. அப்படியே பார்த்தேன்... பக்கத்தில் வைரமுத்து மீசை தடவி சிரித்துக் கொண்டிருந்தார்... வைரமுத்து ரசிகர்கள் குழுமம். அதனைச் சொடுக்கி உள்ளே சென்றேன். எல்லாம் ஒரு வரி இரண்டு வரியில் நிறைய கவிதைகள் எழுதி வைத்திருந்தார்கள். ம்ம்ம்... மணியைப் பார்த்தால் 4.15 காட்டிக் கொண்டிருந்தது.

மீண்டும் அனிச்சையாய் சொடுக்கியைச் சுற்றினேன்...குழுமத்தின் உறுப்பினர் பட்டியலில் ஒரு புகைப்படம். ஒரு குழந்தை மண்ணை எடுத்து மூஞ்சியில் பூசிக் கொண்டிருப்பது போல்... அத்தனை அழகு... அத்தனை வெகுளித்தனம்... அத்தனை நயம்... அத்தனை லயம்... அந்த புகைப்படத்திலே. ச்சே எத்துணை ரசனைக்காரர் இந்த ப்ரொபைலின் சொந்தக்காரர்... நினைத்துக் கொண்டே அந்த ப்ரொபைலின் நிரலியை சொடுக்க முற்பட்ட பொழுது தான் அந்த பெயரைக் கவனித்தேன். மதுவந்தினி. ஒருமுறை உச்சரித்துப் பார்த்தேன்.. ம-து-வ-ந்-தி-னி. அழகான பெயர்... நிரலியைச் சொடுக்கி உள்ளே சென்றால் அந்தக் குழந்தை படம் தெளிவாய்த் தெரிந்தது. அப்படியே சொடுக்கியைச் சுற்றினேன். யாரெல்லாமோ அவளைப் பற்றி டெஸ்டிமோனியல்கள் எழுதியிருந்தார்கள்.
"இவள் மிக ரசனைக்காரி..." "இவள் தனித்துவமானவள்..." "இவள் பெரிய படிப்பாளி..." "இந்த புஜ்ஜிக்குட்டி என் செல்லக்குட்டி..." விதம் விதமாய் 7 டெஸ்டிமோனியல்கள். இத்தனைக்கும் இடையில் ஒரே ஒரு வாசகம் மட்டும் என்னை மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்தது. யாரோ ஒரு தாடிக்கார இளைஞன் எழுதியிருந்தான். "தயவு செய்து மிகைப்படுத்துகிறேன் என்று நினைக்காதீர்கள்... மதுவந்தினி - 23 வயதில் ஒரு அன்னை தெரசா இவள்..." யாரோ ஒரு நல்ல பெண் போலும். நினைத்துக் கொண்டே அந்தக் கணிணித்திரையை மூட முற்பட்ட பொழுதுதான் அதைக் கவனித்தேன். என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை. கண்களைக் கசக்கி நன்றாகத் திறந்து பார்த்தேன். அவளுடைய ஸ்டேட்டஸ் செய்தி பளிச்சிட்டுக் கொண்டிருந்தது...

"ஹைய்யா... இன்னைக்கு ராத்திரி நெல்லை எக்ஸ்பிரஸ்ல பாட்டி வீட்டுக்கு போறேனே :) :) :)"

இந்தப் பெண்... இந்த 23 வயது அன்னை தெரசா... இந்த மகா ரசனைக்காரி... நான் போகும் ரயிலில் தான் பயணிக்கப் போகிறாள்... இந்த இளந்தென்றல் என்னிலிருந்து ஒரு 100 மீட்டர் பரப்பிற்குள் தான் இன்று இரவு முழுதும் வீசப் போகிறது...

பார்க்க முடியுமா? தெரியாது... பேச முடியுமா ? தெரியாது... குறைந்தது அவள் எந்தப் பெட்டியில் வருகிறாள் என்று தேடவாவது முடியுமா? தெரியவே தெரியாது... இருந்தாலும் நம் பெட்டியாகவே இருந்து விட்டால்? பார்க்கலாம்... நினைத்துக் கொண்டே அந்த ப்ரொபைலின் ஒவ்வொரு வரியயையும் உற்று உற்றுப் படித்தேன்.

என்னைப் பற்றி : நமக்கு கெடக்கிறது கெடைக்காம போகாது... கெடைக்காதது கெடைக்கவே கெடைக்காது... தலைவரோட வழில அப்படியே போய்ட்டு இருக்க சாதாரண பொண்ணு.. - ரஜினி ரசிகை போலும்...
பேசத் தெரிந்த மொழிகள் : தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, ப்ரெஞ்ச். - ஒரு நிமிடம் ஆட்டம் கொடுத்தது எனக்கு.
திருமண பந்தம் : இன்னும் ஆகவில்லை... - எனக்கு மூச்சுக் காற்று சீரானது...
பிடித்த படங்கள் : நாயகன், மொழி, காதல், கல்லூரி, அபூர்வ சகோதரர்கள், அன்புள்ள ரஜினிகாந்த், மின்னலே, காதல் கொண்டேன், ஆறிலிருந்து அறுபது வரை, காதலுக்கு மரியாதை, அம்முவாகிய நான் இந்தியன், மின்சார கனவு.
- அட !!! அத்தனையும் எனக்கும் பிடித்த - மிக மிக பிடித்த படங்கள். சத்தியமாய் நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை.
பிடித்த புத்தகங்கள் : வைரமுத்து, சுஜாதா, சேட்டன் பகத் எழுதிய அனைத்தும்..
பிடித்த உணவு : அம்மா சமைக்கும் எல்லாம்.
:
:
:
:
உன் வருங்காலத் துணை எப்படி இருக்க வேண்டும் : எனக்கும் அவருக்கும் பிடித்தது ஒரு 70% பொதுவாக இருக்க வேண்டும்.
மனக்கணக்கு போட்டு பார்க்கிறேன். 70 அல்ல 90%க்கும் மேலயே ஒத்துப் போகிறது. மணி சரியாக 5. 9 மணிக்கு ரயில். எப்படியும் ரயில் பயணிகள் சார்ட் ஒரு 7 மணிக்குள்ளாவது தயார் ஆகி விடும். எப்படியாவது இன்று இவளை பார்த்து விட வேண்டும். அவள் ப்ரொபைலை மீண்டும் ஒரு முறை பார்த்து அவள் பள்ளி கல்லூரி எல்லாம் உறுதி செய்து கொண்டேன். எங்கே வேலை செய்கிறாள் என்பது மட்டும் இல்லை. முடிவோடு கிளம்புகிறேன். என் இரு சக்கர வாகனம் நேராக அடையார் ஒடிசியில் போய் நின்றது. சேட்டன் பகத்தின் "2 ஸ்டேட்ஸ்", வைரமுத்துவின் "காவிநிறத்தில் ஒரு காதல்" வாங்கிக் கொண்டேன். வண்டியை வீட்டில் விட்டு விட்டு பறக்கும் ரயில் பிடித்த பொழுது மணி பார்த்தேன் 5.45.

"டிங் டிங்ங்ங் ... எழும்பூர் ரயில் நிலையம் உங்களை அன்போடு வரவேற்கிறது"
நான் போய் ரயில் சார்ட் ஒட்டும் இடத்தில் தேடிப் பார்க்கிறேன். இன்னும் நெல்லை எக்ஸ்பிரஸ்க்கான சார்ட் வரவில்லை. இரண்டாவது நடைமேடை தான் பொதுவாக நெல்லை எக்ஸ்பிரன் வரும் நடை மேடை. போய் அமர்ந்து கொண்டேன். என்னென்னவோ தோன்றியது. ஒருவேளை அவளைக் கண்டுபிடிக்க முடியாமலே போய்விட்டால்.... அவள் ஓர்க்குட் பெயரும் பயணச்சீட்டுப் பெயரும் வேறு வேறாக இருந்து போனால்... அவள் குளிர்சாதனப் பெட்டியில் வந்தால் - பார்க்க முடியாமல் போனால்... நடப்பது நடக்கட்டும்.... காவி நிறத்தில் ஒரு காதலை புரட்ட தொடங்கினேன். ஒரு 8 மணி ஆனது. ரயில் நடைமேடைக்கு வந்து விட்ட்து. பயணிகள் விவரம் ஒட்டத் தொடங்கியிருந்தார்கள் இருவர். முதல் விவரச்சீட்டைப் போய் பார்த்தேன்... "மதுவந்தினி F 23" இல்லை... இரண்டு மூன்று நான்கு... இல்லை... சரி குளிர்சாதன வகுப்பாக இருக்குமா? சரி இதைவிட்டு அங்கு போய் பார்க்கிறேன்... அங்கும் இல்லை. மீதம் இருப்பது இரண்டாம் வகுப்பில் 9 பெட்டி.. முதல் வகுப்பில் 1... 10 பெட்டிகள்தான்... விடாமுயற்சி, மனம் தளராதே, கனவு காணுங்கள்... என்னென்னெவெலாமோ எண்ணத்தில் ஓடுகிறது. கடவுள் இம்முறை என்னை அதிகம் சோதிக்கவில்லை. S7ல் தட்டுப்பட்டது "மதுவந்தினி F 23" கண்டிப்பாக அவளாகத்தான் இருக்க வேண்டும்... 19ஆம் எண் இருக்க்கை. மேல் இருக்கை. என்னுடைய பயணச்சீட்டை எடுத்துப் பார்க்கிறேன், S8 4ஆம் எண் இருக்கை. சரி ஒரு பெட்டிதான் வித்தியாசம். இருந்தாலும் இந்தப் பெட்டியிலேயே யாரிடமாவது மாற்றீக் கேட்கலாமா. 22ஆம் எண் இருக்கை "S7 சுந்தரேசன் M 55" என்று போட்டிருந்தது. இவந்தான்... மன்னிக்கவும்... இவர்தான் சரியான ஆள் என்று தோன்றியது எனக்கு. 55 வயது, மேல் இருக்கை வேற... அதுக்கு S8 ல இருக்க நம்மளோட கீழ் இருக்கையைக் கொடுக்கலாம். கஷ்டப்படாமலாவது வருவார். பேசிப் பார்க்கலாம். நினைத்துக் கொண்டே அந்த இருக்கையில் போய் அமர்கிறேன். 9 மணிக்கு ரயில் புறப்பாடு.. நான் அமர்ந்திருந்த இருக்கைத் தொகுப்பில் இன்னும் யாரும் வரவில்லை. நிறைய யோசனைகள் வந்து வந்து போனது. நாம் செய்வெதெல்லாம் சரியா? யாருன்னே தெரியாத ஒரு பொண்ணுக்காக இவ்வளவு கஷ்டப்படணுமா?

எங்கோ ஒரு அசீரீரி வைரமுத்து குரலில் ஒலித்தது...

"ஐந்தங்குல இடைவெளியில்

அமிர்தம் இருந்தும்

பட்டினி கிடந்து

பழகியதுண்டா?

காதலித்துப் பார்..."


யாரோ ஒரு நடுவயதுக்காரர் வந்து பெட்டியில் அமர்ந்து நிந்தனையக் கலைத்தார்.

"சார்...
நீங்க எந்த சீட்டு?"
"22 தம்பி... அப்பர் பெர்த்"

ஆஹா... இவர்தானா அது.. பார்த்தால் 55 மாதிரி தெரியலையே... நினைத்துக் கொண்டேன்.

"ஓஹோ... சார் எங்க போறீங்க??"

"திருநெல்வேலிதான் தம்பி... நீங்க?"
"நானும் திருநெல்வேலிதான் சார்..."

அப்படியே பேசிப்பேசி... எங்கே வேலை செய்கிறேன்.. எவ்வளவு சம்பளம்... சொந்த ஊர்.. பூர்வீகம், இத்யாதி இத்யாதி மற்றும் இன்ன பிற விவரங்களையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டார். வயதானவர்களுக்கே உள்ள பொதுப்பழக்கம்…

யோசித்து யோசித்து தயங்கித் தயங்கிக் கேட்டேன்..
"சார்... தப்பா நெனைக்க கூடாது... நான் இந்தப் பெட்டி கிடையாது. பக்கத்துப் பெட்டி.. என் நண்பனொருத்தன் இந்தப் பெட்டியில் வர்றான்... நானும் கூட பேசிகிட்டே வரலாம்னு பாக்குறேன்.. நீங்க தப்பா நெனைக்கலேன்னா, பக்கத்துப் பெட்டிக்கு போக முடியுமா? அதோட அது லோயர் வேற.. உங்களுக்கு சிரமம் இல்லாமயும் இருக்கும்..." - ஒருவாறாக கேட்டு முடித்தேன்.

"நண்பனா.. எந்த சீட்லப்பா?" - ஒருமாதிரியாய் கேட்டார் அவர்..

"19 சார்" - யோசனை சிறிதும் இல்லாமல் பட்டென்று சொன்னேன்.

"அப்படியா.. ஒரு நிமிஷம் இரு" என்றபடியே எழுந்து போனார்...

திரும்பி வந்தவராய் "அதுல ஏதோ பொண்ணு பேருல்லப்பா போட்டுருக்கு" - நெற்றியைச் சுருக்கிக் கேட்டார்..

"ஆமா சார்... அந்த பொண்ணு என் தோழிதான்... அதுக்காக தான் சொல்றேன்.." கொஞ்சும்... மன்னிக்கவும், கெஞ்சும் தொனியில் சொன்னேன் நான்..

"ம்ம்ம்... ரயில் கிளம்பட்டும்... பார்க்கலாம்..." சொல்லிவிட்டு ஜன்னல் வெளியே பார்க்கலானார்..

"போவாரா.. மாட்டாரா... தெரியவில்லை... எப்படியும் அந்த பொண்ணு வந்தவுடனே என்னைய நாயாக் கூட மதிக்காது... அதுக்கப்புறம் தான் அறிமுகமே படுத்திக்கணும்... அதெல்லாம் பாத்துட்டு இவர் என்னைய ரொம்ப அசிங்கமா நெனச்சாருன்னா.." பலவிதமான சிந்தனைகள் தோன்றி மறைந்த வண்ணம் இருந்தது. அதற்குள் அந்தப் பெட்டிக்கு இன்னொரு நாலு பேர் வந்து சேர்ந்திருந்தார்கள். அந்தப் பெண் இன்னும் வரவில்லை. கனவுமில்லாமல் நினைவுமில்லாமல் ஒரு பதட்ட மனநிலை நிலவியது எனக்கு..

"என்னப்பா.. ரயில் கெளம்ப இன்னும் 5 நிமிஷம் தான் இருக்கு.. எங்கப்பா உன் தோழியக் காணோம்? " கொஞ்சம் சத்தமாகவே கேட்டார் அவர்.

"வந்துருவா சார்.. வந்துருவா..." சொல்லிவிட்டு ஜன்னல் வழியே சுற்றும் முற்றும் பார்த்தேன்..
"இவரு ஏன் இவ்வளவு நோண்டுறாரு... ஆஆஆஆ... " வேர்க்கத் தொடங்கியது எனக்கு...

"ஏய்.. ரயில் கெளம்ப போதுப்பா.. இன்னும் வரல... போன் பண்ணிப் பாருப்பா" இன்னும் கொஞ்சம் சத்தமாகவே சொன்னார்..
ஒன்றும் சொல்லவில்லை நான்.

"போன் பண்றதா.. யாருன்னே தெரியாத ஒரு பொண்ணுக்கு... என்னன்னே தெரியாத ஒரு நம்பருக்கு என்னத்த போன் பண்றது." நினைக்க நினைக்க ஒரு போலாயிருந்தது. "மதுவந்ந்ந்ந்தினினினினி... ஏன் என்னைய பாடாப்படுத்துற" என்று கத்த வேண்டும் போலிருந்தது எனக்கு.

"என்னப்பா.. சொல்லிகிட்டே இருக்கேன்... கால் பண்ணி பாரப்பா" என்றார் அவர்.

"இல்ல சார்... அவகிட்ட செல்போன் இல்ல.. " கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு பொய் சொன்னேன் நான்..

"என்னப்பா இது.. இந்தக் காலத்துல பூ விக்கிறவன்.. புண்ணாக்கு விக்கிறவன்லாம் செல் வச்சுருக்கான்... வயசுப் பொண்ணுகிட்ட செல்போன் இல்லையா ?" சொல்லிவிட்டு அதிர அதிர சிரித்துக் கொண்டிருந்தார் அவர்...அந்தப் பெட்டியில் இருந்த மற்றவர்களும் என்னை ஒரு மாதிரி பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்..
ரயில் கிட்டத்தட்ட கிளம்பியே விட்டது... அவள் வரவில்லை. எப்படியும் இதற்கப்புறம் வரப் போவதுமில்லை... இங்கு வராத அவளுக்காக ஒரு நான்கு பேர் என்னைப் பரிகாசித்துக் கொண்டிருக்கிறார்கள். நினைக்க நினைக்க தலை சூடேறியது எனக்கு..

"அய்யோ!! தயவு செய்து கொஞ்ச சிரிக்காம வர்றீங்களா.." கொஞ்சம் கத்தியே விட்டேன்..
ரயில் தடக் தடக்கென்று வேகமெடுக்கத் தொடங்கியிருந்தது.

"எனக்கென்னப்பா.. உன் ப்ரெண்டு.. வரலயேன்னு சொன்னேன்... என்னவோ போ.. .டீ.டீ.ஆர் வந்தாருன்னா சொல்லிட்டு எடம் மாத்தி விட்டுடு..." கொஞ்சம் அடங்கிய குரலில் சொன்னார் அவர்.
ஆமா.. அவளே வரலையாமா... இனி நான் இங்க உக்காந்தா என்ன... அங்க உக்காந்தா என்ன... கடுப்பாய் இருந்தது எனக்கு
"இல்ல சார்.. நீங்க இங்கயே இருக்கதுன்னா இருங்க... நான் வேணா அங்க போய்க்குறேன்" ஒரு சுரத்தே இல்லை என் குரலில்.

"என்னப்பா லோயர் பெர்த் தர்றேன்னு சொன்ன? இப்போ இப்படி சொல்றியே" ஏளனமாய்ச் கேட்டார் அவர்.

கொஞ்சம் குறுகுறுத்தது எனக்கு.
"சரி சார்.. நீங்க அந்த லோயர எடுத்துக்குங்க.." கொஞ்சம் தன்னிலையில் ஆசுவாசப் படுத்திக் கொண்டேன் நான்..

நான் சொல்லிவிட்டு அந்தப் பெட்டியின் வாசலை நோக்கி நடக்கத் தொடங்கினேன். ஒரே சிந்தனையாய் இருந்தது. போய்க் வாசற்பக்கம் இருந்தக் கண்ணாடியைப் பார்த்தேன். என் மூஞ்சி எனக்கே பிடிக்கவில்லை. மூஞ்சியைக் கழுவிவிட்டு மீண்டும் பார்த்தேன். இப்பொழுது கொஞ்சம் பிடித்தது. விரக்தி சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு மீண்டும் இருக்கைக்குத் திரும்பினேன். அவர் டீ.டீ.ஆரிடம் ஏதோ கிசுகிசுவென்று பேசிக் கொண்டிருந்தார்..

என்னைப் பார்த்தவராய் "சொல்லிட்டேன்பா... மாறிக்கலாம்" என்றார்.

"கொஞ்சம் உங்க டிக்கெட் குடுங்க" - கேட்டு வாங்கி டிக்கட்டில் ஒரு கிறுக்கு கிறுக்கி என்னிடம் கொடுத்து விட்டு சென்றுவிட்டார் டீ.டீ.ஆர்.
அவர் போனமாத்திரத்தில் "சரி வாப்பா.. போகலாம்" பெட்டியை எடுத்துக் கொண்டு எழுந்தார் அவர்.
"ம் ம்.. வாங்க.." அழைத்துச் சென்று பக்கத்துப் பெட்டியில் என் இருக்கையில் விட்டு விட்டு ஒரு நோட்டம் பார்த்தேன். மூன்று சுடிதார் பெண்கள் அந்தப் பெட்டியில். அதிலும் இருவர் கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே அழகாக இருந்தார்கள். "சரி சார்... உக்காந்துக்கோங்க. நான் அங்க போறேன்" சொல்லிவிட்டு அந்தக் பெண்கள் கூட்டத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு நடக்கத் தொடங்கினேன் நான்.
வயிற்றுக்குள் ஏதோ அடுப்பெரியும் சத்தம் கேட்டது எனக்கு. "இந்த டொக்கோமோ விளம்பரத்துல வர்ற கண்ணாடி போட்ட அந்த குண்டு புட்டிக்குதான் நல்லதுல்லாம் நடக்குமா? எனக்கெல்லாம் "நடக்காதா..." ஓங்கி ரயில் சுவற்றில் ஒரு குத்து விட்டேன். "அம்ம்ம்மா......" கை வலித்தது எனக்கு. மீண்டும் பழைய இடத்தில் வந்து அமர்ந்தேன். ரயில் தாம்பரத்தில் நின்று கொண்டிருந்தது. பேசாம தூங்கிற வேண்டியதுதான். "மதுவந்தினி - நெல்லை எக்ஸ்பிரஸ்தான போட்ருந்தா... ஏன் வரல... வர்ற வழில ஏதாவது பிரச்சனை ஆகியிருக்குமா... இல்லேன்னா கடைசி நேரத்துல ஏதாவது தாமதப் பட்டிருக்குமா.. தெரியவில்லை...

நல்லா சத்தம் போட்டு இருமும் தாத்தா அல்லது பாட்டி, தொனதொனவென்று பேசிக் கொண்டே வரும் பெரியம்மா வயதுப் பெண்கள், அதீத சத்தமாய் குறட்டை விடும் குண்டு ஆசாமிகள், இரவு முழுதும் அழுது கத்திக் கரையும் கைக்குழந்தைகள், இவர்கள் மட்டுமே என் ரயில் பயணங்களில் எப்பொழுதும் உடன் வந்திருக்கிறார்கள். ஒரு அழகான அல்லது ரசனையான பெண்ணோடு பயணம் செய்யும் குடிப்பினையெல்லாம் எனக்கு இல்லை போலும்" நினைத்த பொழுது மனது லேசாக கனத்தது. ரயில் தாம்பரம் தாண்டி ஒரு அரை மணி ஆகியிருந்தது. பேசாம மேல ஏறி படுத்துரலாமா நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே செங்கல்பட்டு நிலையத்தில் நின்றது ரயில்....
"ம்ம்ம்.. கெளம்புனவுடனே படுக்கலாம்" யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே தனது பெட்டியை கொண்டு வந்து எதிர் இருக்கையில் வைத்து விட்டு அமர்ந்தாள்..

பேரழகி என்று சொல்லமுடியாவிட்டலும் ஒரு குடும்பாங்கான அழகாய் இருந்தாள். சிறகுகளைக் கழற்றி வைத்து விட்டு அதற்கு பதிலாக துப்பட்டா போட்டுக் கொண்ட ஒரு மாநிற தேவதை மாதிரி இருந்தாள் அவள். வான் நீல நிறச் சுடிதார், அதே நிறத்தில் வலைபின்னப்பட்ட துப்பட்டா, சிறிதாய் ஆடும் ஜிமிக்கித் தோடுகள், முக்கோன வடிவில் கல்வைத்த பொட்டு, நெற்றியில் தவழ்ந்த மென்மையான் முன்முடி எல்லாமே கன்கச்சிதமாய் மேக்கப்பே போடாத அவள் அழகை சிந்தாமல் சிதறாமல் பார்த்துக் கொண்டது.

"மதுவந்தினி ???" சட்டென்று கேட்டேன், இதற்கு மேலும் தாமதிக்க கூடாதென்று.

"சார்ட்ல பேர பாத்துட்டீங்களா ??" கண்களை ஊடுருவிக் கேட்டாள்...

"திருநெல்வேலி ஜெயந்திரா ஸ்கூல்ல படிச்ச மதுவந்தினி நீங்கதான ?"

"ஆமா.. நீங்க?" அவள் நெற்றியில் குழப்ப ரேகை பரவியது.

"கோயமுத்தூர் சி.ஐ.டி ல பி.டெக்தான ?" அவள் கண்களைப் பார்த்துக் கேட்டேன்.. இரண்டு நொடிகளுக்கு மேல் தொடர்ச்சியாக எல்லாம் அவள் கண்களைப் பார்க்க முடியவில்லை.

"ஆமா... நீங்க யாருன்னு... ?" நகத்தைக் கடித்துக் கொண்டு ஆழ்ந்து யோசித்தாள்...

"ம்ம்ம்... என்னைய தெரியல... ம்ம்ம்... சரி அத பொறுமையா யோசிங்க... இப்போ சொல்லுங்க... இதெல்லாமா சார்ட்ல போட்ருக்காங்க?" கொஞ்சம் அதட்டல் தொனியில் கேட்டேன் நான்..

"இல்லை... ஆனா... " அவள் முகம் முழுதும் குழப்ப ரேகைகள் கோலமிட்டுக் கொண்டிருந்தன...

"சரி... நீங்க ஏன் எக்மோர் வராம செங்கல்பட்டுல வந்து ஏறுனீங்க?" கொஞ்சம் சத்தமாகவே கேட்டேன்.

"இல்ல... எனக்கு கம்பெனி இங்கதான்... மகேந்திரா சிட்டில..." - குழப்பத்தில் இருந்து மீளாமல் பதில் சொன்னாள்...

"எந்தக் கம்பெனி?" - ஆர்வம் அதிகமானது எனக்கு...

"இன்போசிஸ்... ஆனா எவ்ளோ யோசிச்சாலும் தெரியல நீங்க யாருன்னே... மொதல்ல உங்க பேரச் சொல்லுங்க?" கொஞ்சம் திடமாகவே கேட்டாள்...

"நான் யாரா? ம்ம்ம்... எல்லாம் என் நேரம்... சரிங்க நீங்க அத அப்புறமா யோசிச்சு முடிவு பண்ணிக்கோங்க..." - சொன்னேன் நான்...

"முடிவு பண்ணணுமா? ஹலோ... யாருங்க நீங்க... ??" - கொஞ்சம் முகம் மாறியது அவளுக்கு.

"அய்யோ.. சாரி... சொல்லுங்கன்றதுதான்.. முடிவு அப்படி இப்படின்னு" கொஞ்சம் நாடிப் பக்கம் ஏதோ வழிவது போலே தோன்றியது... துடைத்துக் கொண்டேன்.

"இல்ல.. நீங்க மொதல்ல சொல்லுங்க..? யாரு நீங்க.. என்னைய பாலோ பண்றீங்களா?" - அவள் கண்கள் என்னைக் குத்திக் கிழித்து விடுவது போல் பார்த்தது...

"அய்யோ... அப்படில்லாம் இல்லங்க... சும்மா பேசலாமேன்னுதான்.."

"என்னங்க.. என் ஸ்கூல், காலேஜ்லாம் சொல்றீங்க... அப்புறம் யாருன்னு கேட்டா சொல்ல மாட்றீங்க?" கோபத்தில் அவள் கன்னம் சிவக்கத் தொடங்கியிருந்தது...

"அய்யோ.. பாட்டி வீட்டுக்கு போறப்ப ஏங்க இவ்ளோ கோபப்படுறீங்க? அமைதியா இருங்க.. " மெலிதாய்ச் சிரித்து விட்டேன்...

"பாட்டி... பாட்டி வீட்டுக்கு... இதுக்கு மேல பொறுக்க முடியாது... இதுதான் லிமிட்..." வார்த்தை குழறியது அவளுக்கு.

"தண்ணி குடிக்கிறீங்களா?" பாட்டிலை நீட்டினேன்...

"எல்லாமே சொல்றீங்க.. யாரு நீங்க?" கொஞ்சம் கோபமெல்லாம் குறைத்து அமைதியாக கேட்டாள்...

"ஒரு 5 நிமிஷம்... கொஞ்சம் யோசிங்க... வந்து சொல்றேன்..." எழுந்து கதவுப் பக்கம் சென்றேன்..
கைப்பேசியை எடுத்து யாருக்கோ அழைத்துக் கொண்டிருந்தாள் அவள்..
போய் ஒரு 5 நிமிடம் ஆசுவாசப்படுத்தி விட்டு திரும்பி வந்தேன்... வந்த மாத்திரத்தில் கேட்டாள்...

"ம்ம்ம்.. இப்போ சொல்லுங்க... யாரு நீங்க?"

"நான் ஒரு சாதாரண ஆளுங்க..." என்றேன் நான்..

"அப்படின்னா?" எரிச்சல் முட்டியிருந்தது அவள் குரலில்...

"ஒன்னும் இல்லீங்க... எனக்கு வீட்ல பொண்ணு பாக்குறாங்க.." - கண்ணடித்து சொன்னேன் நான்..

"அதுக்கு... ???" - சிறிது பயம் காட்டினாள் முகத்தில்...

"இல்ல.. நானும் கூட எனக்கு நல்ல பொண்ணா பாத்துட்டு தான் இருக்கேன்..."- நான்.

"அதுக்கு நா என்ன பண்ணட்டும்... ?" - ஒரு சுதி ஏறியிருந்தது அவள் குரலில்...

"நான் ஓர்க்குட்டுக்கும். மேட்ரிமோனியலுக்கும் பெரிய வித்தியாசம் இருக்குறதா நினைக்கிறதே இல்லீங்க..." - சொல்லிவிட்டு அதிர அதிர சிரித்தேன்...
அவளுக்குப் புரிந்தது.... ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்..

"என்ன ஒன்னுமே சொல்ல மாட்றீங்க?" - நான்.

"நா ரொம்ப குழம்பிட்டேன்... அது எப்படிங்க? ஓர்குட்ல பாத்துட்டு இப்படி ட்ரெயின்ல ஒன்னா வந்தா உங்கள கல்யாணம் பண்ணனுமா? ரொம்ப சீப்பா நெனச்சுட்டீங்களா?" கோபம் கொப்பளித்தது அவள் குரலில்...

"ஹலோ... நான் ஒன்னும் இப்போ உடனே உங்கள கல்யாணம் பண்ண சொல்லி சொல்லலையே... என்னையப் பத்தி முழுசா சொல்றேன்... உங்களப் பத்தி முழுசா சொல்லுங்க... புரிஞ்சுக்குவோம்... ஒத்து வந்தா பாக்கலாம்... இல்லேன்னா நாளைக்கு காலைல எறங்கி போய்ட்டே இருக்கலாம்..." - சாதராணமாய்ச் சொன்னேன்..

"எனக்கு இதெல்லாம் சரியாப் படல..." - திடமாய்ச் சொன்னாள் அவள்...

"ஏங்க... காலேஜ்... கம்பெனி... பக்கத்து வீடு... ஒரே தெரு... இப்படிதான் காதல் கல்யாணம் நடக்கனுமா? நம்ம ஒரு வித்தியாசமா பண்ணுவோமே..." - மீண்டும் கண்ணடித்து சொன்னேன் நான்..

"தயவு செய்து கொஞ்சம் பேசாம வர்றீங்களா? தல வலிக்குது" - தலையைப் பிடித்துக் கொண்டு கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்து விட்டாள்...
என் பகீரத முயற்சி அதள பாதாளத்தில் போய்க் கொண்டிருப்பதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஒன்றும் சொல்லாமல் மேலேறிப் படுத்து விட்டேன். கண்மூடி தூங்கலாமா என முற்பட்டேன்... முடியவில்லை.... கனவுமில்லாமல் நினைவுமில்லாமல்... தூக்கமுமில்லாமல் விழிப்புமில்லாமல் மீண்டும் ஒரு விசித்திர மனோநிலை நிலவியது எனக்கு.
சில மணித்துளிகள் கரைந்திருக்கும்... அவள் இருக்கையில் இருந்து எழுந்தாள்... சிறிதும் சலனமில்லாமல் அவள் முகம் பார்த்தேன்...

"லைட்ட ஆப் பண்றேன்... நீங்க கொஞ்சம் தூங்குறிங்களா?" என்றாள்.

"லைட்ட ஆப் பண்ணவுடனே வர்றதுக்கு தூக்கம் என்ன இருட்டா?" - பட்டென்று கேட்டேன்...
க்ளுக்கென்று சிரித்து விட்டாள் அவள்...

"ம்ம்ம்ம்... ஆப் பண்ணுங்க..." சுரத்தில்லாம்ல் சொல்லி விட்டு தலை திருப்பிக் கொண்டேன்...

"ஹலோ... உங்க பேரு என்னங்க?" தோள்தட்டிக் கேட்டாள்...

"நான் என் பேர மட்டும்லாம் சொல்ல முடியாது.. சொன்னா நெறைய சொல்லுவேன்... ஒரு அரைமணி நேரம் ஆகும்... ஓகேயா?"

ம்ம்ம்.. லூசாப்பா நீ என்பது போல் ஒரு பார்வை பார்த்தாள்...

"என்ன ஓகேயா?" - மீண்டும் கேட்டேன் நான்...

"சரி சொல்லுங்க..." - என்றாள்...

அந்தப் பெட்டியின் வாசல்ப்க்கம் கூட்டி வந்து பேரு, ஊரு, வேலை, படிப்பு அத்தனையும் சொன்னேன்... உனக்கும் எனக்கும் 70 இல்ல 90% நல்லாவே ஒத்துப் போகும்னு அடிச்சு சொன்னேன்...

அரை அல்ல.... ஒன்றரை மணி நேரம் ஆகியிருந்தது... அந்த முழு ஒன்றரை மணி நேரத்தில் அவள் சிரிக்காமல் இருந்தது ஏறக்குறைய 15 நிமிடங்கள் தான்...

"சிரிச்சு சிரிச்சு வயிறெல்லாம் வலிக்குது... முடியல" என்றாள்...

நான் வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்...

"சரி போய் தூங்கலாமா..." சோம்பல் முறித்தபடியே கேட்டாள்...

"தூங்கவா... நீ சாரி நீங்க இன்னும் ஒன்னுமே சொல்லையே?" என்றேன்...

"உடனேல்லாம் சொல்ல முடியாது... காலையில முடிஞ்சா பாக்கலாம்..." சொல்லிவிட்டு அவளுடைய மேல் இருக்கையில் ஏறிப் படுத்துக் கொண்டாள்...
நானும் படுத்துப் பார்க்கிறேன்.. உட்கார்ந்து பார்க்கிறேன்... தூக்கம் வந்தபாடில்லை...
:
:
:
:

கீழே ஏதோ சலசலவென்று சத்தம் கேட்டது.. ஆஹா.. விடிந்து விட்டது... எதிர் இருக்கையில் பார்க்கிறேன்... அவளைக் காணோம்... பாதியிலயே எறங்கிப் போய்ட்டாளா? நம்பர் கூட வாங்கலையே... படபடத்தது எனக்கு... கீழே பார்த்தேன்.. நேற்று இடம்மாற்றி விட்ட அந்த 55 வயதுக்காரர் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்...

நான் கீழிறங்கி வந்த நொடியில் அவள் முகம் கழுவிக்கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தாள்... போன மூச்சு மீண்டும் வந்தது எனக்கு...

வந்தவள் அவரைப் பார்த்தாள்.. மீண்டும் என்னைப் பார்த்தாள்...
நான் அந்த பூகம்பத்தை எதிர்பார்த்திருக்கவில்லை...
நிதானமாய் அவரைப் பார்த்து சொன்னாள்" அப்பா... நான் சொல்லல... என் நண்பர்... இவருதான்பா அது"
வந்த மூச்சு உடல் உயிரெல்லாம் தாண்டி ரயிலை விட்டு வெளியே எங்கோ ஓடிக் கொண்டிருந்தது...

"அப்பாவா?" வாய் பிளந்து அவளைப் பார்த்துக் கேட்டேன்...

"என்னம்மா நீ... நீ செங்கல்பட்டுல இருக்கேலயே உனக்கு போன் பண்ணி சொன்னேன்... உன் நண்பர் வந்துருக்காருன்னு... நீ எனக்கே அறிமுகப்படுத்துறயே... நீங்க உக்காருங்க தம்பி..." என்னைப் பார்த்து சொல்லிக் கொண்டிருந்தார்...

இதயம் மணிக்கு 2000 முறை துடிக்கத் தொடங்கியிருந்தது எனக்கு... விடு விடுவென்று பெட்டியைத் தூக்கிக் கொண்டு வாசல் பக்கம் வந்து நின்று கொண்டேன்... ரயில் தாழையூத்து ரயில் நிலையம் தாண்டிக் கொண்டிருந்தது... இன்னும் ஒரு 10 நிமிஷம்தான்... அப்படியே குதித்து ஓடி விடலாம் போல் இருந்தது எனக்கு... 10 நிமிடத்திற்குள் பல்லாயிரம் சிந்தனைகள்... இவள் கதை இவ்வளவுதானா... அப்பாவும் மகளும் சேர்ந்து என்னைய லூசாக்கிட்டாங்களா? நம்பர் கூட வாங்கல... போய் ஓர்க்குட்ல செய்தி அனுப்புனா பதில் அனுப்புவாளா? இன்னும் பல்லாயிரம் சிந்தனைகள்...

நல்ல வேளை.. என் இதயம் இன்னும் வேகமாய்த் துடிப்பதற்குள் திருநெல்வேலி வந்திருந்தது... இறங்கி அப்படியே ஓட எத்தனிக்கையில் பின்னலிருந்து சத்தம் கேட்டது

"ஓய்.. நில்லு... எங்க ஓடுற?"
நின்று திரும்பிப் பார்த்தேன்... அவள் பகக்த்தில் வந்து கொண்டிருந்தாள்.. பின்னால் அவள் தந்தை பெட்டிகளை இறக்கி வைத்துக் கொண்டிருந்தது தெரிந்தது....

"போய் ஓர்குட்ல உன் செல் நம்பர ஸ்கராப் பண்ணு.. பேசலாம்" - அவள்...
"ம்ம்ம்ம்... பண்றேன்..." சொல்லிவிட்டு அவள் தந்தை வருவதற்குள் ஓட எத்தனித்தேன்...

"ஓய்... சொல்லு... என் ஓர்க்குட் ப்ரொபைல்ல ரிலேஷன்சிப் ஸ்டேட்டஸ சிங்கிள்ல இருந்து கமிட்டெட்னு மாத்திடுறேன் !!! ஓகேதான?" சொல்லிவிட்டு அதிர அதிர சிரித்துக் கொண்டிருந்தாள்...

அப்படியே பெட்டியைக் கீழே போட்டு விட்டு அவளை நெருங்கிச் சென்றேன்... என் கைகள் லேசாக நடுங்கியது... அது ரயில் நிலையம் என்பதைக் கூட மறந்து அவள் முகத்தை கையில் ஏந்தினேன்... கண்கள், கன்னம், காது மடல் என மாறி மாறி முத்தமிட்டேன்...

இப்படில்லாம் உங்களுக்கு தோனுச்சுன்னா நீங்க தமிழ் படத்துல வர்ற ரயில்வே ஸ்டேஷன் கிளைமாக்ஸ் நெறைய பீல் பண்ணிப் பாப்பீங்கன்னு நெனக்கிறேன்... அப்படில்லாம் ஒன்னுமே நடக்கல...

"ம்ம்... சரி... பண்றேன்" என்று மட்டும் சொன்னதோடு கிளம்பி விட்டேன்...

அதிலிருந்து சரியாக இருபதாவது நிமிடத்தில் என் வீட்டின் கணிணித்திரையில், ஓர்க்குட் வைரமுத்து குழுமத்தின் உறுப்பினர் பட்டியலில் தேடுவதற்கு டைப் செய்து கொண்டிருக்கிறேன் 'மதுவந்தினி"...



--
Regards,
Ramkumar Natarajan.
http://www.ramkumarn.com

2 அன்பு உள்ளங்கள்....:

பாலாஜி சங்கர் said...

இன்றைய இனைய சூழலை நன்றாக பயன்படுத்தி நன்றாக எழுதி உள்ளீர்கள்

சுரபி said...

Interesting.. wishes to u :)

Life is not Waiting for SomeOne
who made for YOU...
But life is living for SomeOne who lives Because of YOU....!!!
Realize you can't change the past,
but you can start a new tomorrow.
Don't try to do everything at once;
take one step at a time.!!!!!!!

'The biggest guru-mantra is:
Never share your secrets with anybody. !
It will destroy you.'
(Chanakya quotes)



மனமே........
கனவை கலைய விடாதே!!
நினைவை தொலைய விடாதே!!
துணிவை பணிய விடாதே!!!
நிமிர்ந்து நில் ....உலகம் உன் பின்னால்....
Blog Widget by LinkWithin

Search This Blog