Saturday, December 19, 2009

பரிசுப்போட்டி... சிறுகதை 19

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பேருந்து எண்:3c

புளியங்குடி பேருந்து நிலையம் இடியுடன் கூடிய மழையில் நனைந்து கொண்டிருந்துது.அதோடு அரசு பள்ளி மாணவர்களின் கூச்சலில் இன்னும் அதிர்ந்து கொண்டிருந்தது.அத்தனை பேரும் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்கள்.அந்த பள்ளி என்னவோ பேருந்து நிலையத்திற்கு முன்பே 2 கிலோமீட்டர் தள்ளி தான்.இடியோ மழையோ பசங்களுக்கு இங்கே வந்து ஏறினால் தான் பயணம் இனிக்கும்.காரணம் பேருந்து நிலைய லாலா கடை இனிப்புகள் அல்ல.. பேருந்து நிலையத்தை அழகாக்கும் மாணவிகள்.

என்னடா.. இன்னைக்கு அந்த சுகந்தி புள்ளய காணும்??”

டேய்.. அவ உன்ன தாண்டா பாக்கறா”

பசங்களின் மனங்கள், பேருந்தைப் போல் அலைபாய்ந்து கொண்டிருந்தது.

ஆடி அசைந்து வந்தது 3-c அரசு பேருந்து.கடையநல்லூர் வ்ழி மாணவர்கள் பாய்ந்து தொற்றிக்கொண்டார்கள். பாஸ் வண்டியாச்சே.. சிறுவர்கள் போய் இருக்கையில் அமர பெரிய பசங்க வாசல்ல தொங்கி வம்பிழுத்தபடி இருந்தனர். நடத்துனர் வழக்கம் போல உள்ளே போகும்படி எச்சரித்தார்.வழக்கம் போல பசங்களும் இந்த காதுல வாங்கி மறு காதுல வெளிய விட்டனர். அதுவும் இன்று +2 பசங்களுக்கு கடைசி நாள். பேருந்து அல்லோகல்லோலப்பட்டது. பேப்பர கிழிச்சு பறக்கவிட்டு கத்திக்கொண்டிருந்தனர்.

சும்மாவே இவனுகளோட ஏழரை தான்.இன்னைக்கு இவனுக அடங்கமாட்டனுக..எல்லாரும் பாஸ கையில எடுத்து வச்சுக்கோங்க. பாஸு இல்லாதவங்க சில்லறய சரியா வச்சுக்கோங்க..ஏலே ராசு.. நீ பாஸு வச்சுருக்கியா?” – நடத்துனர் கத்தினார்.

அத வச்சு இனிமே பட்டம் கூட விடமுடியாது. உங்க பஸ்ஸு சீட்டு துடைக்க வச்சுக்கோங்க”- ஈன்னு சிரிச்சபடி சொன்னான் ராசு.

நடத்துனர் திரும்பி, “முதல்ல நீ பாஸ் பண்ணு.அப்புறம் பாஸ நான் துடைக்க வாங்கிக்கறேன்” – சொல்லிவிட்டு கடந்தார்.

வேடிக்கை பார்த்த பசங்க சிரிப்பில் அதிர்ந்து சென்றது பேருந்து.அமைதியானான் ராசு.

எப்பா சங்கரு.. இன்னைக்கோட பரிச்சை முடியுது போல? நல்லா எழுதிருக்கியா?” – நடத்துனர் அக்கறையுடன் கேட்டார்.

இல்லனா நீங்க போய் திருத்தி பாஸ் பண்ணி விட்டுருவீரா?” – ராசு நக்கலடித்தான்.

எலேய்.. நீ மட்டும் பாரு.. என் பஸ்ஸுல காலத்துக்கும் பாஸுல தான் போக போற.” – நடத்துனர் சொல்ல மீண்டும் அதிர்ந்தது பேருந்து.அவர்கள் பஞ்சாயத்து எப்பவும் தீராது.

நல்லா எழுதிருக்கேண்ணே.. எப்படியும் என்ஜினியர் சீட்டு கெடச்சிடும்”

இது புள்ள.. உங்கூட சுத்துது பாரு.. ஒண்ணும் உருப்படறதுக்கு இல்ல” – பொரிந்தவாறு சென்றார் நடத்துனர்.

ழை குறைந்து மெதுவாய் தூறிக்கொண்டிருந்தது. பேருந்து, 7th டே பள்ளி நிறுத்தத்தில் நின்றது. சங்கரின் கண்கள் வழக்கம் போல் அகல்யாவைத் தேடியது.இதோ இரட்டை ஜடையுமாய், அதில் ஒரு பக்கத்தில் மல்லிகைப்பூவுமாய் அகல் விளக்கைப்போல் நின்று கொண்டிருக்கிறாள். அகல்யா சங்கரின் சொந்த அத்தைப்பெண்.மொத்த உரிமை உள்ள ஒரே முறைப்பெண்.அகல்யா என்றால் சங்கருக்கு ரொம்ப இஷ்டம்.சிறுவயதிலிருந்து இயல்பாய் உரிமையில் வந்த ஒரு தலைப்பட்ச காதல்.இன்னும் சொல்லாமல் பொத்தி வைத்திருக்கிறான். அவனது மாமா பெரிய பணக்காரர்.அது தான் அவள் மெட்ரிக்கில் பத்தாவது படிக்கிறாள்.அவன் தன் வசதிக்கேற்ப அரசு பள்ளியில் படிக்கிறான்.சங்கர் தன் காதலை பொத்தி வைத்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

அகல்யா இந்த பேருந்தில் ஏற மாட்டாள்.அவளுக்கு அதற்கும் அவசியமும் இல்லை.தனியார் சொகுசு பேருந்தில் தான் வருவாள். நிறுத்தத்தில், எதிரில், ஊரில் எங்கு பார்த்தாலும் சின்ன சிரிப்பு கூட இருக்காது அவளிடம். சங்கர் தன் காதலை பொத்தி வைத்திருப்பதற்கு இதுதான் முக்கிய காரணம்.இன்றும் பார்க்கிறாள் ஆனால் சிரிப்பு இல்லை.சங்கரின் கூட்டாளிகளுக்கு அவனது அத்தைப்பெண்ணை தெரியும் அவனது காதல் தெரியாது.நிறுத்தத்தில் அவள் நின்றிருந்தால் "சங்கரு" என்று கத்துவார்கள். அவன் எத்தனை முறை சொன்னாலும் கேட்பதில்லை இந்த பசங்க.

அகல்யா மெதுவாய் நடந்து இவர்கள் பேருந்தை நெருங்கினாள்.அனைவரும் அமைதியானார்கள்.பேருந்தில் ஏறி உள்ளே சென்றுவிட்டாள்.

"என்னடா மாப்ள.. உன் மொறப்பொண்ணு மொரச்சுட்டே இதுல வருது??" - சிவம் கேட்டான்.

"தெரிலடா.. மழை வரதுக்குள்ள இதுல போய்டலாம்னு நெனச்சுருப்பா" - சங்கர் சொல்லிவிட்டு பார்வையை வெளியில் விட்டான். 'இந்த பசங்ககிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்' - மனதுள் சிரித்துக்கொண்டான்.

நீலநிற சுரிதார், காலில் விலை உயர்ந்த செருப்பு, அவளது நிறம் - அந்த பேருந்தில் அந்நியமாய்த் தெரிந்தாள் அகல்யா. பயணச்சீட்டு வாங்கிவிட்டு கிடைத்த இடத்தில் உட்கார்ந்துகொண்டாள்.

சங்கரின் மனதுக்குள் ஆயிரம் கேள்விகள். 'ஏன் என்றுமில்லாமல் இன்று இதில் ஏறினாள்.? என்னைப்பார்க்க இருக்குமோ??' - சிரித்துக்கொண்டான்.மெதுவாய் திரும்பி பார்த்தான்.முன்னிருக்கையின் பின்னாடி காம்பசால் எதோ கிறுக்கிக்கொண்டிருந்தாள்.அவ்வளவு தான்.படபடத்து போய்விட்டான்.

'என்ன கிறுக்குகிறாள்?' என்று யோசிக்கும் போதே, பசங்க பார்த்துவிட்டார்கள்.

"பேருந்து அரசு சொத்து.உங்கள் சொத்தல்ல." - கத்தினார்கள்.

"உன் பேர் சொல்ல ஆசை தான்.. உள்ளம் உருக ஆசை தான்" - முடிவே பண்ணிவிட்டார்கள். அவள் மெதுவாய் திரும்பி முறைத்தாள்.

"மாப்ள..முறைக்குதுடா.." - அமைதியானார்கள்.

ஆனால் ராசு விடவில்லை.

"26 எழுத்து படிக்கிற உங்களுக்கே இவ்வளவு ஏத்தம் இருந்தா 247 எழுத்து படிக்கற எங்களுக்கு எவ்ளோ ஏத்தம் இருக்கும்??" - கொஞ்சம் அதிகமாகவே கத்தினான்.

"மச்சான்.. எங்கயோ போய்ட்டடா.. நீ பாசாகிடுவ" - பக்கத்திலிருந்த சிவம் சிரித்தபடி சொன்னான்.

"அடங்குங்கடா" - சங்கர் அவர்களைக் கட்டுப்படுத்தினான்.

சொக்கம்பட்டியில் ராசு,சிவம் இறங்கிக்கொள்ள, பேருந்து அமைதியானது.சங்கரும் பின்னாடி ஒரு சீட்டில் அமர்ந்து அகல்யாவைப் பார்த்தான். தூறலை விரல்களால் அளைந்து கொண்டிருந்தாள்.ரசித்துக்கொண்டிருந்தான் சங்கர். கைகளை உள்ளிழுத்து துடைத்துக்கொண்டு, கையில் ஒரு காகிதத்தோடு எழுந்தாள்.இவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். இவனை நோக்கி தான் வருகிறாள்.இவன், என்னவென்று கண்களால் வினவ, காகிதத்தை நீட்டினாள்.

'என்னது இது?? நான் செய்ய வேண்டியது இவள் செய்கிறாள்?' - குழம்பினாலும், மனதில் பட்டாம்பூச்சி பறக்க வாங்கிக்கொண்டான்.

'என்னது?" - என்று கேட்கும் முன் அவள் அவள் இருக்கையில் இருந்தாள். மீண்டும் தூறல். மீண்டும் விரல்கள்.

இவன் ஆசையுடன் வேகமாய்ப் பிரித்தான்.இடி இறங்கியது.பேருந்தில் இல்லை, இவன் மனதில்.

"உன்னுடன் இருக்கும் சுப்ரமணியனை விரும்புகிறேன்.நீ தான் உதவி செய்யணும்." - என்று எழுதப்பட்டிருந்தது. எதோ ஒன்று வேகமாய் நழுவியது.ஓவென்று அழ வேண்டும் போல் இருந்தது. அமைதியாய் இருந்தான்.

'இது தெரிந்து தான் எனக்காக நீ அழுகிறாயா மழையே??' - கண்கள் பனித்தது.

திரும்பவும் படித்தான். 'எந்த சுப்ரமனியான இவ சொல்றா???' - குழம்பியபடி மெல்ல எழுந்தான். அவளது பின்னிருக்கையில் அமர்ந்தான்.

"அகல்யா" - அழாமல் அழைத்தான். எனினும், கண்ணீர் தேங்கியதை அவனால் தடுக்க முடியவில்லை.கொட்டிவிடாமல் உள்ளிழுத்துக்கொண்டான்.

அவள் திரும்பினாள். ஆனால் தலை குனிந்து இருந்தாள்.

"யார் இந்த சுப்பிரமணியன்?"

"தெரிலையா?? " - மெதுவாய் குரல் வெளிவந்தது.

"இல்ல.."

நிமிர்ந்தாள்.."உன் கண் ஏன் கலங்கி இருக்கு??"

"ஒண்ணும் இல்ல.. நீ சொல்லு.. யாரு இவன்?? எந்த ஊர்?? "

"நீ ஏன் அழற??" அத முதல்ல சொல்லு.. "

அவன் வெளியில் வெறித்துப்பார்த்தான்... 'என்ன சொல்ல?? நான் உன்னை விரும்பினேன் என்றா??'

"நீ என்ன விரும்பறயா??"

திடுக்கிட்டு பார்த்தான் சங்கர்.. ஒன்றும் சொல்லாமல் தலை குனிந்தான்.

நெடுநேர மௌனம்.. பின் அவளே பேசினாள்..

"அது உன் பேர் கூட ஓட்டிட்டு இருக்கற சங்கர சுப்பிரமணியன் தான்.."

சடக்கென்று தலை உயர்த்தினான். நிறுத்தம் அருகில் வர, "நீ என்ன விரும்பறயான்னு தெரில.. அதுக்காகத்தான் அப்படி பண்ணேன்.. அப்புறம், நீ பாட்டுக்கு அடுத்த வருடம் காலேஜ் போய் அங்க யாரையாவது விரும்பிறகூடாதில்ல..." என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டாள்.

முன்னிருக்கையில் அவள் கிறுக்கியிருந்த 'சங்கர்'யில் அவளது காதல் சொல்லிப்போயிருந்தாள்.

************************************************************************************************

பெயர்: சு.சேதுராமன்

மின்னஞ்சல்: ssssr1981@gmail.com , sethu_7000@yahoo.co.in


6 அன்பு உள்ளங்கள்....:

திருவாரூர் சரவணா said...

ஜாலியா கொண்டுபோய் கடைசியில கொஞ்சம் கலக்கி அப்புறம் அசத்திட்டீங்க. வெற்றிபெற வாழ்த்துக்கள்.

Unknown said...

சூப்பரா இருக்குங்க கதை. சினிமா பாத்தா மாதிரியே இருந்தது. பாத்து எவனாவது உருவிரப்போறான்

SSR said...

உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி

suji said...

ரொம்ப நல்லா இருக்கு கதை...
வாழ்த்துக்கள்!

as mugilan has said, oru cinema paththa effect.. very touching!

சுரபி said...

:)))))))

superrrrrrrrr

Unknown said...

சேது ஜி..... கலக்குறேள்..போங்கோ...
சூப்பரா இருக்கு...

வாழ்த்துக்கள்.

Life is not Waiting for SomeOne
who made for YOU...
But life is living for SomeOne who lives Because of YOU....!!!
Realize you can't change the past,
but you can start a new tomorrow.
Don't try to do everything at once;
take one step at a time.!!!!!!!

'The biggest guru-mantra is:
Never share your secrets with anybody. !
It will destroy you.'
(Chanakya quotes)



மனமே........
கனவை கலைய விடாதே!!
நினைவை தொலைய விடாதே!!
துணிவை பணிய விடாதே!!!
நிமிர்ந்து நில் ....உலகம் உன் பின்னால்....
Blog Widget by LinkWithin

Search This Blog