“திருநெல்வேலி சந்திப்பு” ..இவர்களின் தமிழ் படுத்துதலை,தமிழைப் படுத்துதலை எண்ணி சிரித்தபடியே ஜங்ஷன் ரயில் நிலையத்திற்குள் நுழைந்தேன். முதுகில் Bag தொற்றி இருந்தது. குழந்தை இல்லாதவர்களின் வீட்டிற்குள் சில வருடங்கள் கழித்து நுழைவது போல் சென்ற முறை பார்த்ததிலிருந்து பெரிதாய் எந்த ஒரு மாற்றமுமின்றி இருந்தது. எல்லாம் வைத்தது வைத்த இடத்தில்.அதே இடத்தில் எடைபார்க்கும் இயந்திரம். அதே இடத்தில் தானியங்கி பணம். அதே பழைய நாற்காலியில் கம்பி வலைக்குப் பின்புறம் பயணச் சீட்டுப் பதிவர். சென்ற முறை இருந்தது போலவே ஏற்கனவே ஏறக்குறைய முப்பது பேர் வரிசையில் நிற்க, முப்பத்தியோராவது பெட்டியாய் போய் இணைந்து கொண்டேன்.
எனக்கு முன்னால் ஒரு பெரியவர். பெரிய மீசை. தான் இன்னும் இளைஞர் தான், பிறந்த நாள் பெப்ருவரி முப்பது என யாரிடமோ அலைபேசிக் கொண்டிருந்தார்.ஒட்டுக் கேட்பது தவறென, அவருக்கு முன்னால் இருந்தவரைப் பார்த்தேன். அவருக்கு வயது இன்னும் அதிகம். தொந்தி. உடையும்,தமிழும்,குல்லாவும் மும்பைக்கு போவதினை அமைதியாய் கத்திக் கொண்டிருந்தது. தன் குர்தாவின் பையில் நீளமாய் கைவிட்டு எதையோ எடுத்து வாயில் குதப்பிக் கொண்டு திரும்பினார். மீசை இளைஞரிடம் “அழந்தபுரி ழெக்ஸ்பிறழ் ழெப்போ வழும்?” .
பெரியவர் வேறு புறமாய் திரும்பி மீண்டும் அலைபேசியில் “நிறைய வேலை! கொஞ்சம் காப்பி இருந்தா நல்லா இருக்கும்” மும்பை தொந்தி என்னிடம் அதே கேள்வியைக் கேட்கத் திரும்பியது. நான் குதிங்காலை உயர்த்தி தொந்தியை தாண்டி பார்வையை அனுப்பினேன். பழைய ரவிச்சந்திரன் தலைமுடி.வெள்ளையாய்ப் பிறந்து செம்மண்ணில் வளர்ந்த வேஷ்டி. சட்டையற்று வியர்வையால் எண்ணை தடவிய எருமை போல் உரமேறிய உடம்பில் தார் ரோட்டில் கொட்டிக் கிடக்கும் கொஞ்சம் செம்மண் போல தோளில் ஒரு துண்டு. பச்சை நிற முரட்டுத் துணியில் செய்த பெல்ட். இவர் மதுரையைத் தாண்டிப் போகப் போவதில்லை.
வரிசை கரைந்திருந்தது. கிராமத்தார் விருதுநகர், தொந்தி ஒரு “மும்பை VT Station ” , மீசை பெரியவரும்,நானும் ஆளுக்கொரு எக்மோருடன் பிரிந்தோம். மூன்றாவது நடைமேடைக்கு வந்தேன்.
“மெட்ராஸ் போற வண்டி எப்ப வரும்டே?”
திரும்பினேன். கிராமத்தார்.
“இன்னும் அரை மணி நேரம் ஆகும். நீங்களும் சென்னை தான் வரீங்களா?”
“ஹீ ஹீ ஹீ நா அங்கன போய் என்னத்த வெட்டி முறிக்கப் போறேன்? எனக்கென்ன பொண்ணா வச்சிருக்காவ? நான் விருதுநகர் போலாம்னு”
“ஓ ஹோ!”
“ஏன் தம்பி..நீ மெட்ராஸ்கா போற?”"
“ஆமாங்க “
“ம்ம்ம்.. எந்தங்கச்சி மவனும் அங்கன தான் இருக்கான். என்னத்த..இங்கன இருந்தாலே பாக்க முடியாது”
அவரது பெருமூச்சில் நடைமேடையில் கிடந்த ஒரு காகிதக் கோப்பை நகர்ந்து தண்டவாளத்தின் அருகில் விழுந்தது.
இதில் ஏதோ குடும்பக்கதை இருப்பதாய் தோன்றியது. .
“அங்க அவர் என்ன பண்றார்?”
“படிக்காத கூமுட்டை.. நான் என்னனு சொல்லி உனக்கு சொல்றது? ஏதோ கம்பூட்டராமே.. அதான்டே ஆளுக்கொரு டி.வி பொட்டி வச்சி சிஎஸ்சி ல பாத்துட்டு இருபாவல்லா? அதுல எதோ பெரிய வேலை பாக்குறானாம். மாசம் எட்டாயிரமோ .. பத்தாயிரமோ சம்பளமாம்.” மறுபடியும் ஒரு பெருமூச்சை செலவழித்தார்.
குடும்ப விசயஙகளைக் கேட்பது நாகரீகம் இல்லைதான்.
” அவர நீஙக எத்தனை தடவை பத்துருக்கீங்க?”"
“ஒத்த தடதான் பாத்தேன். அதுவும் பத்து வருசத்துக்கு முன்னாடி.பன்னெண்டு வயசிருக்கும். நோஞ்சான் மாறி இருந்தான். அதான் அவன் ஆத்தாளுக்கும் நமக்கும் பேச்சுவாத்தயே அத்துப் போச்சே.. எந்த மூஞ்ச வச்சிக்கிட்டு அவன்ட போறது. அவன் ஆத்தா கூட ஒத்துப்பா. அவன் அப்பன் மட்டும் பாத்தாமுன்னா என்னய மானமத்து போறமாதிரி கேட்டுட்டுதான் விடுவான்”
“ஏன் எதும் குடும்ப பிரச்சினையா? சொல்லக் கூடாதுனா வேண்டாம்” நான்.
முழுதுமாய் சொல்ல வேண்டுமென கடவுளை வேண்டிக் கொண்டேன்.
“உன்ட்ட சொல்றதுக்கு என்னடே.. அவன் ஆத்தா ஒரு ஓடுகாலி”.
அவருக்கு கண் சிவந்து கை நடுங்கியது. நான் ஆர்வமானேன்.
ஒலிப் பெருக்கியில் ஒரு பெண் நெல்லை எக்ஸ்பிரஸ் மூன்றாவது நடைமேடைக்கு வருமென்ற எல்லாருக்கும் தெரிந்த ரகசியத்தை மூன்று மொழிகளில் மெதுவாய் அலறினாள். அந்த சத்தம் கேட்டு அலறி அடித்து ஓடிவரும் குழந்தைபோல் வண்டி வந்து நின்று “கூஊஊஊஊ” என மூச்சு வாங்கியது.
நானும் ஓடி , ஒரு அழகியை தெரிந்து இடித்து சிரித்தபடி கடந்து ஒரு கிழவியை தெரியாமல் இடித்து “நாசமத்துப் போவான்” என வரம் வாங்கி, ஒரு இளைஞன் காலை மிதித்து அவன் முறைப்பிற்க்கு பின்னால் இருந்த Bag ஆல் தெரியாமல் படுவது போல் ஒரு அடியை பரிசளித்து கதவருக்கில் ஜன்னலை ஒட்டிய இருக்கையைப் பிடித்து எதிர் இருக்கையில் Bag ஐ வைத்துவிட்டு கிராமத்தாரை தேடினேன்.
அவருக்கும் மன பாரம் இறக்க நான் தேவையாய் இருந்தேன் போலும். என் பின்னாலயே ஒடி வந்திருந்தார். Bag ஐ எடுத்து விட்டு அவரை இருக்கச் செய்தேன். “உங்க பர்ஸ் தம்பி” அவர் குடுத்தது என் பணம்,பயணச் சீட்டு, வங்கி கடன் அட்டைகள் எல்லாம் வைத்திருந்த பர்ஸ்.இதைக் கொடுக்கத்தான் இந்த வயதில் ஓடி வந்திருக்கிறார்.
“இளந்தாரிக்கு வேகம் வேணும்தேன். ஆனா அதுக்காக எதையும் விட்டுடு போய்டக்கூடாது. பாதிதூரம் போனதுக்கப்புறமா தேடுனா எதுவுமே கிடைக்காது”
அவர் சொல்றது பர்ஸ்க்கு மட்டும் இல்லையென மனதில் பட்டது.
“இது நடந்து இருவது வருசம் இருக்கும். களக்காடு பக்கம் வடுச்சிமலைல இருந்தோம்.எங்கப்பன் அவரோட 30 வயசுல யாரையோ வெட்டிட்டு ஜெயிலுக்கு போயி அஙகயே செத்துட்டான். ஆத்தாதாம் நடுவைக்கும்,கள புடுங்கவும் போய் எங்கள காப்பாத்துச்சு. நான் தலையெடுத்ததும் கொத்தனார் கையாளா போய் கொத்தானார் வரைக்கும் வளந்தேன். என் தங்கச்சி அப்ப பன்னண்டாப்பு படிச்சிட்டிருந்தது. நான் கொத்தனாரா வீடு புடிக்கும் போதுதான் அவன் வந்து சேந்தான் கையாளா. பேர் ………………….. பாருல இந்த அநியாயத்த, கீழ்ஜாதி பயலுக்கு இப்படி ஒரு பேரு.(அவர் கை தன்னிச்சையாய் ஒரு முறை மீசையை முறுக்கிக் கொண்டது) ஆனா வேலைல பய கெட்டி. வெட்டிட்டு வான்னா கட்டிட்டு வர பய. அவன எனக்கு ரொம்ப புடிக்கும். அவனையும் என் தங்கச்சியையும் கண்ணாடிக்கார் தோட்டத்துல பாக்குற வரைக்கும்.
அருவாள எடுத்து விரட்டுனேன். கால்ல விழுந்து கதறுனான். சின்ன ஜாதிப் பயலே! இந்த ஊர்லயே இருக்க கூடாதுன்னேன். ராத்திரியே காலி பண்றேன் சாமின்னான். காலிப்பய இந்த ஓடுகாலியையும் கூட்டிட்டு ஊரக் காலி பண்ணிட்டான். கோவத்துல அருவாளோட அவன தேடி ஆறுமாசமா அலைஞ்சேன். திருனவேலி ட்வுனு,சங்கரகோயிலு,வல்லனாடு,தென்காசி, கல்றகுறிச்சி, ஏன் ஒரு தடவ யாரோ சொன்னாவன்னு பாம்பே கூட போனேன். ஆப்படல. அப்புறம் கோவம் மறந்து போச்சு,வருசம் ஓடுச்சு. எனக்கு கல்யாணம் ஆச்சு. ஒரு பொட்ட பொறந்துச்சு..அந்த பொட்ட காது குத்துக்கு தங்கச்சியும் , அந்த கீழ் ஜாதி பயலும் வந்தாவ. உள்ள வரச்சொல்லலாம்னு லேசா பாசம்.. ஆனா அந்த வயசுல ரோஷம் பாசத்த ஜெயிச்சிருச்சு.விரட்டி உட்டுடேன். அப்புறம் பத்து வருஷம் கழிச்சு அந்த பய எதோ பெரிய படிப்புல மார்க்கு வாங்குனாம்னு கோயிலுக்கு செய்ய வந்தாக. விரட்டல. விலகிப் போய்ட்டேன். எம்மவ பெரிய மனுஷி ஆனப்போ அயித்த சீர் செய்ய வரச்சொல்லி கடுதாசி போட்டேன்.அவுக வரல. ரெண்டு நாள் கழிச்சு விலாசம் தப்புன்னுட்டு கடுதாசி திரும்பி வந்துச்சு,அத்தோட அவங்க உறவு அத்துப் போச்சி.” மறுபடியும் ஒரு வேகப் பெருமூச்சு.
ஜன்னலைத் திறந்தேன். பனிக்காற்று மெதுவாய் எங்களை தழுவிச் சென்றது.நிலவொளியில் அவரது கண்களின் வெடித்து திமிறிய கண்ணீரைப் பார்த்தேன்.முக வியர்வையைத் துடைப்பது போல் அவசர அவரசமாய் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். நான் அதை பார்க்காதது போல் நிலாவைப் பார்தேன்.மீண்டும் அவரிடம் திரும்பி “இப்ப எங்க போறீங்க?” கேட்டுவிட்டு அபசகுனமோ எனப் பயந்து நாக்கை கடித்துக் கொண்டேன்.
“செம்பாண்டிக் கோட்டை. விருதுனகர் டவுனுல இருந்து 30 மைலு. அங்கதான் இருக்கோம்.இப்ப நான் மேஸ்திரி. பொண்ணு பவளம் டீச்சருக்கு படிச்சிருக்கு. அவளுக்கு வல்லநாட்டுல ஒரு மாப்பிளய பாத்துட்டு வரேன். ஹும்ம்ம்ம்.. என் மறுமவன் இருக்கையிலேயே அசல்ல மாப்பிள்ள தேட வேண்டி இருக்கு”. சொல்லி விட்டு துண்டை சுருட்டி தலைக்கு குடுத்து விட்டத்தை பார்க்க ஆரம்பித்தார்.
நான் கண்மூடி வீட்டில் அம்மா சொன்னதை எண்ணிப் பார்த்தேன். ” டேய்.. மெட்றாஸ்ல வேல பாக்குரதெல்லாம் சரி. அங்கன இருந்து எந்த சிருக்கியையும் இழுத்துட்டு வந்து என் தலைல கல்லப் போட்டுராத.. நான் வடுச்சிமலைல என் அண்ணன் பார்வைல வசதியா வாழாம இப்படி சீரழியிரது போதும். உனக்கு நான் பாக்குற பொண்ணுதான்.”
எப்போ எப்பொழுது தூங்கினேன் என்று தெரியவில்லை. எழுந்து பார்க்கையில் வண்டி எதோ ஒரு சந்திப்பில் நின்று கொண்டிருந்தது. தேடினேன். அவரைக் காணவில்லை. கூட்டம் அதிகமாகி இருந்தது.
இப்போது எதிர் இருக்கையில் பெரிய மீசை வயதான இளைஞர் அமர்ந்திருந்தார். தலையை ஒரு முறை ரஜினிகாந் போல் சிலுப்பிக் கொண்டார். “விருதுனகர்?” என்றேன். மேலும் கீழும் பார்த்துவிட்டு “விருதுனகர் மதுரைலாம் தாண்டி வண்டி இப்போ திருச்சில நிக்குது”
அவர் பழைய ஆனந்த விகடனை விரித்தார்.
நான் நினைத்துக் கொண்டேன் அடுத்த மாதம் ஊருக்குப் போகையில் அம்மாவயும் கூட்டிக்கிட்டு செம்பாண்டிக் கோட்டைக்கு போய் பவளத்த பொண்ணு கேட்கணும்.
லதாமகன்
2 அன்பு உள்ளங்கள்....:
padiththu mudiththathum oru punnagai thandhadhu ungal kadhai.. vaalthugal.. :)
ரொம்ப ரொம்ப நல்லாருக்கு.
Post a Comment