இளம்பச்சை நிறத்தில் அரும்பு விட்டிருந்த அவரைக் கொடியொன்று பந்தலில் படராமல் அதன் போக்குக்குக் காற்றில் அலைபாய்ந்து கொண்டிருந்தது. அதையொட்டி வளர்ந்திருந்த ஆலமரம் அந்த அவரைக் கொடியைச் சுற்றிக் கொள்ள ஆளாய்ப் பறந்தது. மண்ணோடு கலந்திருந்த தன் வேரைப் பிடுங்கிப் பிரிய வேண்டி கிளைகளை வேகமாக அசைத்துப் பார்த்தது. மார்கழி மாத வாடைக் காற்று இதையெல்லாம், உரசியபடியே ரகசியமாக நோட்டம் விட்டுச் செல்கிறது.
அவள் தனது கைப்பையில் மடக்குக் கண்ணாடி இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொண்டாள். எட்டு மணி வண்டியில் சாளரத்துக் குளிர்க் காற்றை ஆழமாக சுவாசித்தவாறு பயணப்பட்டாள். எழுந்ததில் இருந்து ஓடியாடி, கிடந்த வேலைகளை எல்லாம் அரையும் குறையுமாய் முடித்துவிட்டு எட்டு மணி வண்டியை ஒருவழியாகப் பிடித்து விட்டாள். குறிப்பாக அந்த வண்டியில அவளுக்கு கண்மூடித்தனமான ஈடுபாடு. எமனே வந்து அழைத்தாலும் எட்டு மணி வண்டியில் தான் வருவேன் என்று பாசக்கயிற்றைப் பிடித்தபடி முரண்டு பிடிப்பாள். கொஞ்ச காலமாகத்தான் அவளுக்கு இந்த ஆவலாதி. சரியாகச் சொன்னால் மூன்று மாதத்திற்கு முன்னொரு நாள் அரசம்பட்டி விலக்கை அடுத்த ஏரிக்கரையோர ஆலமர நிழல் நிறுத்தத்தில் ஏறிய அவனைப் பார்த்ததில் இருந்து, அவளுக்கு உள்ளுக்குள் சிறு குறுகுறுப்பு, உள்ளங்காலில் வண்டு ஊறுவதைப் போல. அவனப் பற்றி நினைத்தால் சங்கடங்கள் மறைந்து சந்தோசம் முகிழ்வதாக இருந்தது. சில சமயம் வேறு விசயங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாலும் அவசரத்தந்தியாக மணி ஒன்று அடித்து 'என்ன அவனைப் பற்றி நினைக்கவில்லையா ?' என்று கேட்கிறது. சரியா தவறா என்று தராசு நிறுத்திப் பார்க்கத் தெரியவில்லை. ஆனால் அவளுக்கு அது பிடித்திருந்தது. வீட்டில் மட்டும் தெரிந்தால் அழிவுகள் அத்தனையும் அவளைச் சுற்றி அரக்கத்தனத்துடன் அரங்கேற்றப்படும்.
இரவு முழுக்க நிலவில் குளித்த தெருக்களை, அதிகாலைச் சூரியன் மஞ்சள் பூசி அழகுபடுத்திக் கொண்டிருந்தது. அவள் தனது கைப்பையில் மடக்குக் கண்ணாடி இருக்கிறதா இன்று சரிபார்த்துக் கொண்டாள். வாடாமல்லி வண்ணத்தில் சுங்குடிச் சேலையும், நாரையின் இறகு நிறத்தில் ரவிக்கையும் அணிந்திருந்தாள். கோட்டுச் சித்திரம் போலக் கச்சிதமாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள்.
சாளரத்தின் வழியே தெரியும் காட்சிகள் அவளுக்கு தொலைக்காட்சியைப் போல தோன்றியது. அரிதாரம் பூசிய வயல்களையும், வானத்தையும் மேகத்தையும் அதைத் தொடும் மலைமுகடுகளையும் பிரதியெடுத்துச் சிரிக்கும் நீர்நிலைகளையும் அந்த சாளரத்தின் வழியாக ரசித்துக் கொண்டே வந்தாள். தலையை லேசாக வலித்தது. காட்சிகளும் சற்று மங்கியும் தெளிந்தும் தெரிந்தன. காலையில் வெறும் வயிற்றில் மாத்திரைகள் சாப்பிட்டிருக்கக் கூடாது தான். அரசம்பட்டி நிறுத்தத்தை அவளது மனம் எதிர்நோக்கியிருந்தது. அவன் நினைவே அவள் உடல், மனம் முழுதும் வியாபித்து ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. ஏன் ? எதற்கு இப்படி ? இருபத்தியோரு வருட வாழ்க்கையை கணம் கணமாக அசைபோட்டுக் கொண்டே வந்தாள். அலசிப் பார்த்தால் இது வரை அவளின் ஆசைப்படி எதுவும் செய்ததில்லை; செய்ய விடப்பட்டதும் இல்லை. அவளுக்கு பிடித்தமானதை மற்றவர்களே நிர்ணயித்திருக்கிறார்கள். காற்றின் வீச்சுபலத்தின் பக்கமெல்லாம் செல்லும் பாய்மரப் படகாகவே இத்தனை நாள் வாழ்ந்திருக்கிறாள். அவன் நினைப்பு இவளுக்கு கரையை காட்டுவதாக தோன்றியது. தற்சமயம் வேலைக்குச் செல்வதைத் தான் பெரும் போராட்டத்துக்குப் பிறகு செய்திருக்கிறாள். முன்னர் அவள் வேலைகளை மிகவும் சிரத்தையாகவும் பொறுப்பாகவும் முடிப்பவளாக இருந்திருக்கிறாள். இப்பொழுதெல்லாம் அசமந்தமாக இருப்பதே பிடித்திருக்கிறது. மனது மதமதப்பாகவே இருக்கிறது எல்லா நேரமும். பயணத்தின் ஒரு திருப்பத்தில் சரிந்த கைப்பையை அள்ளியெடுத்து மடக்குக் கண்ணாடி இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டாள்.
ஒரு தேநீர் விடுதியை ஒட்டி வண்டி நின்றது. அந்த விடுதிக்கு வீடும் கடையும் சேர்ந்தாற்போல ஒரு அமைப்பு. நூறு வருடம் வாழ்ந்த வீடாகத் தோன்றியது. விசாலமான திண்ணையைக் கடையாக்கியிருந்தார்கள். கடையை ஒட்டிய வாசலை சிறுபெண்ணொருத்தி பெருக்கிக் கொண்டிருந்தாள். மேல்த்துணி எதுவும் போடாமல் அரையில் ஊதாவண்ணத்தில் பூப்போட்ட பாவாடை மட்டும் அணிந்திருந்தாள். அதில் அழகான விசயமே அவள் பெருக்கும் பாணி தான். ஆறு வயதுதான் இருக்கும். குப்பை பெருக்குவதைக் கூட அவ்வளவு நேர்த்தியாக ஒரு ஓவியம் வரைவதைப் போல அழகியல் நுட்பத்துடன் செய்து கொண்டிருந்தாள். வண்டி நகர்ந்துவிட்டது. அந்தச் சிறுபெண்ணுடன் அவள் தன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டாள். அந்தச் சிறுபெண் பதினைந்து வருடம் கழித்தும் இதே போல நேர்த்தியுடனும் ஆர்வத்துடனும் வேலைகளை செய்வாளா ? இல்லை தன்னைப் போலவே அவளும் மாறிவிடுவாளா ? கேள்விகள் வழியில் கடந்துசெல்லும் புளிய மரக் கொப்புகளில் தொங்கிக் கொண்டிருந்ததன. அந்தக் கேள்விகள் காற்றில் உதிர்ந்து அதன் கீழ் செல்வோரின் உச்சி வழியாக உள்ளங்களில் இறங்கி குழப்பங்கள் உண்டு பண்ணுவதாக தனக்குத் தானே கற்பித்துக் கொண்டாள். மடக்குக் கண்ணாடியை எடுத்து ஒருமுறை முகத்தைப் பார்த்துக் கொண்டாள். கண்களின் இருமருங்கிலும் ரத்தச்சிவப்பில் வேர்விட்டோடியிருந்தது. அது ஒரு சிகப்பு ரோஜாச்செடியின் வேர். அதில் பூக்கும் ரோஜா மலரானது தூக்கத்தை உறிஞ்சிக் கொண்டு மாறாக இனிய மாயக் கனவுகளைக் கொண்டு தரும் வல்லமை வாய்ந்தது.
*******
அவள் ஆவலாதியுடன் எதிர்பார்த்த அரசம்பட்டிக்காரன் வந்தே விட்டான். வசீகரப் புன்னகையை வீசிக்கொண்டே அவளைப் பார்க்கிறான். அய்யனார் குதிரையில் இருந்து இறங்கி, அந்த எட்டு மணி வண்டியில் அவன் உருவில் வருவதாக அவள் மனதுக்குள் புனைந்து கொண்டாள். இவளுக்கு பிந்திய இடத்தில் சாளரத்தின் ஓரமே அவனும் அமர்கிறான். அவளுக்கு அவ்வளவு நேரம் இருந்த மதமதப்பும், அமைதியும் சிதறியோடிவிட்டன. பயணத்தின் பாதையில் இருக்கும் மேடுபள்ளங்களில் விரைவாக இறங்கியும் ஏறியும் அலைக்கழிந்தது அவள் மனது. அவள் தனது சிகையைச் சரிசெய்து கொண்டாள். பின்னிலிருந்து அவன் பார்வைக்கு பாவை போலத் தோன்ற வேண்டுமென எண்ணிக் கொண்டாள். ஆனால் அவள் திரும்பி அவன் முகத்தைப் பார்க்கவில்லை. ஏதோ தடுத்தது. இப்படியெல்லாம் நடந்துகொள்வது தவறு என்று ஒரு குரல் அதி ஆழத்திலிருந்து மிகவும் சன்னமாக சக்தியற்று ஒலித்துக் கொண்டிருந்தது. அவள் குனிந்து தன் கைப்பையைத் திறந்து மடக்குக் கண்ணாடியை எடுக்கப் போனாள். அவன் அவளது வலது காது மடலுக்குப் பின்பகுதியிடுக்கில் லேசாக ஊதினான். குளிர்ந்த அந்தக் காற்று அவளுடைய ரோமக்கால்களை சிலிர்ப்படையச் செய்தது. தன்னிலை மறந்தவளாக அவள் அவனுடன் அந்த பச்சை வெளிகளில் இறங்கி உலவ ஆரம்பித்தாள். ஏரிக்கரை ஆலமர விழுதுகளில் தூளிகட்டி அவள் ஆட, அவன் ஆட்டிவிட்டுக் கொண்டிருந்தான். மணம் கமழும் அதே மயக்கும் புன்னைகையை உதிர்த்தவாறே அவன் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தான். அவளுக்கு அது போதை தருவதாக இருந்தது.
தூளியில் ஆடியபடியே அவனுடைய சிகையமைப்பைப் பார்த்தாள். அந்த ஆலமரத்தின் உச்சிக் கிளையில் இருக்கும் கரிச்சான் குருவிக் கூடு போலவே அவன் தலைமுடி அமைப்பு தெரிந்தது.
"என்னத்த மேல இருந்து அப்பிடி பாக்குற ?", அவன் குறுகுறுப்புடன் கேட்டான்.
கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டே இருந்தாள் பின், "ஒங்க தலயப்பார்த்தா குருவிக்கூடாட்டமே இருக்கே, என்ன கரிச்சாங்குருவிக்கு வாடகைக்கு விட்டீகளாக்கும் ? மாசம் பொறந்தா குருவி எம்புட்டு வாடகை தருது ? ", என்று குறும்பு தளும்பிவழியும் வகையில் பதில் கேள்வி கேட்டாள்.
"அதுவா ? ஆமாம்புள்ள எனக்கென்ன தோப்பா ? தொரவா ? இல்ல ஆயிரம் ஏக்கரு நெல்லுக்காடா ? எதுவுந்தான் இல்லையே. அதான் தலமயிரு சும்மாத்தான இருக்குன்னு வாடகைக்கு விட்டுட்டேன். குருவி ரெண்டும் மாசம் பொறந்தவடம் சரியா தொண்ணுத்தெட்டு லவாப் பழம் குடுக்குதுக. அதுல ஒண்ணு ஒண்ணையும் பாதிக் கடிச்சி ஒனக்குத் தாரேன். பதிலுக்கு எனக்கு நீ என்ன தருவ ?", அவளுக்குக் கொஞ்சமும் சளைக்காமல் கேட்டான்.
"பதிலுக்கு என்ன பானை பானையா பொன்னும் நகையும் குடுப்பாகளாக்கும். ஒண்ணுவிடாம எல்லா பழத்தையும் தின்னுட்டு கொட்டைய வேணா தாரேன்", கேட்ட வினாடியில் பதில் சொன்னாள். சொல்லிவிட்டு இளக்காரமாகப் பார்த்தாள். அவன் அவளை அடிக்க குச்சி தேடி ஓட அவள் தூளியில் இருந்து குதித்து தோட்டத்துப் பக்கம் ஓடினாள். நொச்சிக் கம்பைத் தூக்கிப் பிடித்தபடி அவளைத் துரத்திக் கொண்டு அவனும் ஓடினான். ஓடும் வழியில் துக்கம், சோகம், அடக்குமுறை எல்லாவற்றையும் அவள் கால்களில் மிதித்துக் கொண்டே சென்றாள். இருவரும் அவரைக் கொடிப் பந்தலின் கீழ் இளைப்பாறினார்கள். முகத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டனர்.
சிறிது நேரங்கழித்து உடையில் ஒட்டிய காய்ந்த சிறுபுற்களையும் மண்தூசியையும் தட்டியவாறு எழுந்து வரப்போரம் காலாற நடந்தனர். அவனது வலதுகை விரல்களும் அவளது இடதுகை விரல்களும் மட்டுமே லேசாக உரசின. ஒவ்வொரு உரசலிலும் நுனிநாக்கின் புளிப்பாக அவள் சிலிர்த்துக் கொண்டே நடந்தாள். அவர்கள் ஒரு விவசாயக் கிணற்றை ஒட்டி நின்றனர். அவன் குதித்துக் குளிக்கப் போவதாகச் சொன்னான். அவள் ஒன்றும் சொல்லவில்லை. அந்தக் கிணற்றையே வெறித்துப் பார்த்தபடி நின்றாள். சதுரமான பெரிய கேணியது. ஏற்றம் கட்டி இறைத்த சுவடு இன்னும் அழியாமல் இருந்தது. தற்பொழுது மின்சாரத்தைப் பயன்படுத்துவதையும் அறிய முடிந்தது. பெரிய இரும்புக் குழாய் ஒன்று பச்சைத் தண்ணீருக்கு அடியில் பயமில்லாமல் இறங்கி நின்றது. கிணற்றின் ஓரங்களில் தென்னை மட்டையும் குப்பைக் காகிதங்களும் நீரில் மேலும் கீழும் ஆடியபடி மிதந்து கொண்டிருந்தன. அவளுக்கு நீச்சல் தெரியுமா என்று அவன் கேட்டான். தெரியாது என்று சொல்ல அவளுக்குக் கூச்சமாக இருந்தது. அதனால் தெரியும் என்று சொல்லிவிட்டாள். அவளுடைய உச்சிப் பொட்டு கலைந்திருக்கிறது என்று அவன் சொன்னான். ஓடிவந்ததில் வேர்வைக்குக் கலைந்திருக்கும் என்று சொன்னாள். திடீரென்று உச்சந்தலையில் ஊசி இறங்குவதைப் போல உணர்ந்த அவள், தனது கைப்பையைத் திறந்து மடக்குக் கண்ணாடியைத் தேடினாள். அந்தச் சமயம் பார்த்து அவன் அவளைக் கிணற்றில் தள்ளிவிட்டான். "ஐயோ மாமா....", என்று அலறியபடி அவள் அந்தப் பச்சைத் திரவத்தில் கற்சிலை போல விழுந்து முங்கினாள். கிணறு அவளை மிகுந்த மனவிருப்பத்துடன் விழுங்கி விரைவாக உள்ளே இழுத்துக் கொண்டது. மேலே எகத்தாளமான சிரிப்புச் சத்தம் மங்கலாகக் ஒலித்தது.
அவளுடைய மாமா அவளை அதீத கோபத்துடன் முறைத்துக் கொண்டிருந்தான். வீட்டிற்குள் வராதே என்று கெட்ட வார்த்தை சொல்லி திட்டினான். அவளுடைய அம்மா அவளை முறத்தால் அடித்து ஓய்ந்தாள். அவள் அப்பா உரலைத் தூக்கிக் கொண்டு ஓடிவந்தார் அவள் தலையில் போடுவதற்கு. அதற்கு மேல் அவள் மயங்கிவிட்டாள்.
*******
ஆலமரத்தடியில் பெரிய கூட்டம் கூடிவிட்டது. அவரைக்கொடிப் பந்தல் மொத்தமாக விழுந்து கிடந்தது. எட்டு மணி வண்டி ஆலமரத்தின் நடுத்தண்டில் மோதி ஏரிக்கரையில் ஒருக்களித்துச் சாய்ந்திருந்தது. அரிசிக்கடை சண்முகத்துக்குத் தான் தலையில் செமத்தியான அடி. மாட்டுவண்டியில் எடுத்துப் போட்டு அரசு மருத்துவமனைக்கு விரைந்து கொண்டிருந்தார்கள் கூட்டத்தின் ஒரு பகுதியினர். ஆண்டவன் புண்ணியத்தில் மற்றவர் யாருக்கும் பெரிய அடி இல்லை. அவள் மட்டும் படிவழியாக ஏரியில் விழுந்திருக்கிறாள். ஊர்க்காரர்கள் அவளை வெளியே எடுத்து தண்ணீரை வெளியே விட்டு முழிக்க வைத்தார்கள். அவளுக்கு நினைவு வந்தது.
"இந்த ஒத்தப் பனமரத்துக்கு மஞ்ச குங்குமம் வச்சு கும்புடணும்னு தலையாரி சொல்லிக்கிட்டே இருக்காப்ல யாரும் கேக்க மாட்றீயளேயா. இப்பப் பாரு முனியடிச்சிருச்சு. இத்தாம்பெரிய வண்டியையே கவுத்திருச்சேப்பா. ஆளுங்கக்கிட்ட வெளாடலாம், ஆண்டவன் கிட்ட வெளாடலாமா. தை பொறக்குறதுக்குள்ள ஏற்பாடு பண்ணுங்கப்பா அம்புட்டுதேன் நாஞ்சொல்லுவேன்", ஊர்ப்பெரியவர் ஒருவர் ஏதோ கண்டுபிடித்துச் சொல்லிக் கொண்டிருந்தார்.
அவளுக்கு யார் பேசுவதும் கேட்கவில்லை. அவளையறியாமல் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.
"இந்தப் புள்ளையப் பாருங்கய்யா. எப்புடி அழுவுதுன்னு. ஏத்தா மொத அழுகைய நிப்பாட்டு. ஏதோ மாரியாத்தா புண்ணியத்துல எல்லாம் உசுரு பொழச்சு நிக்கோம். இந்தாக்குல நீ மால மாலையா கண்ணுல தண்ணிவிட்டுட்டு நிக்கிற. ஒங்கண்ணீருல கண்மாயே ரொம்பி வழிஞ்சிரும் போலயே", அறிமுகமில்லாத ஒருவர் ஆதரவாக அவளைத் தேற்றிக் கொண்டிருந்தார்.
அவளுக்கு நிதர்சனமும் விளங்கலாச்சு. மூன்று மாதத்திற்கு முன் வந்த அரசம்பட்டிக்காரன் அதற்குப் பின் அந்த வண்டியில் இதுவரை வராததும் இன்று கூட மாயவுலகத்தில் தான் அவனுடன் சஞ்சாரித்ததும் அவளுக்கு உரைத்தது. மாமன் ஏசியதும், அப்பனும் ஆத்தாளும் அடிக்க வந்ததும் எல்லாமும் மயக்கம் தானா ? எதற்காக இப்படிக் கனவுகள் ? கேள்விகளைனைத்தும் புளியமரங்களில் கொக்கி போட்டு தொங்கிக் கொண்டிருந்தன, அதன் கீழ் செல்பவர் மீது விழுவதற்கு ஏதுவாக. அவள் நனைந்திருந்த தனது கைப்பையை வேகமாகத் திறந்து மடக்குக் கண்ணாடியைத் தேடினாள். கண்ணாடி மட்டும் உடைந்திருந்தது. அது அவளுடைய கணவனான மாமன் திருமணத்திற்குப் பிந்திய முதல்த் தைப்பொங்கலுக்குப் பரிசாக வாங்கிக் கொடுத்தது. அவள் இன்னமும் அழுது கொண்டே நின்றிருந்தாள். அந்தக் கண்ணீரில் பெயர் தெரியாத சில சாயங்கள் கண்ணுக்குத் தெரியாமல் கரைந்து ஓடிக் கொண்டிருந்தன.
அவனி அரவிந்தன், மதுரை